Thursday, October 21, 2010

கூடாது காங்கிரஸ் கூட்டணி! திருமா பேட்டி




யாரைப் போர்க் குற்றவாளியாகவும்,    இனவெறிக் கொடூர னாகவும் அறிவிக்ககோரி உலகத் தமிழர்கள் போராடி வருகிறார்களோ... அவரை காமன்வெல்த் விழாவுக்கு அழைத்துவந்து சிவப்புக் கம்பளம் விரித்து மரியாதை செய்திருக்கிறது காங்கிரஸ் அரசு. இதை எதிர்த்து ராஜபக்ஷேவின் கொடும்பாவியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் ஆங்காங்கே எரித்து வரும் சூழலில், தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் பேசினோம்.
''இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை காமன்வெல்த் நிறைவு விழாவுக்கு காங்கிரஸ் அரசு அழைத்திருப்பது எதைக் காட்டுகிறது?''
''ஈவு இரக்கம் என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கக்கூடிய ஒரு கொடூரனை... வாழும் ஹிட்லராக உலகமே காறித் துப்பும் ஒரு வஞ்சகனை, காமன்வெல்த் நிறைவு விழாவுக்கு அழைத்ததோடு, பிரதமர் வீட்டில் விருந்து வைத்தும் மகிழ்ந்து இருக்கிறது காங்கிரஸ் அரசு. 'போரை நிறுத்துங்கள்... புலிகளையும் மக்களையும் காப்பாற் றுங்கள்!' என நாம் ஒப்பாரி வைத்தபோது, ராஜபக்ஷேயை கண்டிக்க முன்வராத காங்கிரஸ் அரசால், இப்போது அவருக்குக் கம்பளம் விரிக்க மட்டும் முடிகிறதா? உலகமே ராஜபக்ஷேயை போர்க் குற்ற வாளியாக அறிவிக்கப் போராடி வரும் நிலையில், அவரை ராஜ உபசாரத்தோடு காங்கிரஸ் அரசு அழைக்க வேண்டிய நோக்கம் என்ன? அத்தனை தமிழர்களையும் அவமானப்படுத்துவதுதானே..?
முதல்வர் கலைஞர் ராஜபக்ஷேயின் அத்துமீறல்கள் குறித்து பல கடிதங்களை மத்திய அரசுக்கு அனுப்பி இருக்கிறார். தமிழகத்தின் இத்தகைய எதிர்ப்பு நிலை தெரிந்தும், ராஜபக்ஷே இங்கே வரவேற்கப்படுகிறார் என்றால்... அது தி.மு.க-வை உரசிப் பார்க்கும் விஷய மாகவே எனக்குத் தெரிகிறது.''
''திட்டமிட்டு இது செய்யப்படுகிறதா?''
''சாதாரணமாகவே தி.மு.க. - காங் கிரஸ் கூட்டணி உடையப்போவதாக மீடியாக்கள் பரபரப்பு கிளப்பி வருகின்றன. அதை நிஜமாக்கும் விதமாக அடிக்கடி சென்னைக்கு வரும் ராகுல் காந்தி, மூத்த அரசியல் தலைவர் என்கிற மரியாதைக்காகக்கூட கலைஞரை சந்திப்பது இல்லை. சமீபத்தில், திருச்சிக்கு வந்த காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, 'தனித்தன்மையோடு காங்கிரஸ் செயல்பட வேண்டும்!' எனச் சொல்லி இருக்கிறார். தனித்தன்மை என்றால் அதற்கு என்ன அர்த்தம்? தனித்து நிற்கப் போகிறார்கள் என்பதா? அல்லது, கூட்டணியில் இருந்தபடியே தனித்தன்மையைப் பாதுகாப்பதா? அதை அந்தக் கூட்டத்தில் விளக்கிச் சொல்லாத சோனியா காந்தி, காமன்வெல்த் விழாவுக்கு ராஜபக்ஷேயை அழைத்துவந்து, தி.மு.க-வுக்கு கூடுதல் நெருக்கடியை உருவாக்கி இருக்கிறார். காங்கிரஸின் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தி.மு.க-வையும் கண்டிப்பாக யோசிக்கவைத்து இருக்கும்!''
''அப்படி என்றால், காங்கிரஸ் கட்சியின் கூட்டணி யிலிருந்து விடுபட வேண்டும் என்று நீங்கள் குரல் கொடுக்காதது ஏன்?''
''தமிழகத்தில் 1967-ல் இருந்து இன்று வரை காங்கிரஸ் பின்னடைவை நோக்கித்தான் சென்றுகொண்டு இருக்கிறது. தனது அகில இந்திய அளவிலான சக்தியைப் பயன்படுத்தியே இப்போது தமிழக காங்கிரஸ் பேரம் பேசி வருகிறது. 'டெல்லி'யைக் கைகாட்டித்தான் தமிழகத்தில் அவர் கள் குப்பை கொட்டுகிறார்கள். தனித்து ஆட்சியை உருவாக்கக்கூடிய சக்தி காங்கிரஸ§க்குக் கிடையாது. இது தி.மு.க-வுக்கும் தெரியும்... அ.தி.மு.க-வுக்கும் தெரியும். ஆனால், ஒருவரை ஒருவர் வீழ்த்துவதற்கான துணையாக இரு பெரிய கட்சிகளும், காங்கிரஸை கையில் வைத்துக்கொள்ளப் பார்க் கிறார்கள். அதனால்தான், காங்கிரஸ§க்கு ஒவ்வொரு முறையும் பம்பர் பரிசு அடிக்கிறது. இரு கட்சிகளின் தோள்களிலும் ஏறி காங்கிரஸ்தான் பயணிக்கிறதே தவிர, காங்கிரஸால் எந்தக் கட்சியும் வளரவில்லை.
சமீபத்திய தேர்தல் நிலவரங்களின்படி காங்கிரஸ§க்கான வாக்கு சதவிகிதம், விஜயகாந்த்தின் கட்சியைவிடக் குறைவுதான். அப்படியிருந்தும், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க-வின் முரணான போக்கே காங்கிரஸை தமிழகத் தில் நிலைகொள்ள வைத்திருக்கிறது. இதை தி.மு.க. மட்டுமல்ல... அ.தி.மு.க-வும் உணர வேண்டும். !''
''காங்கிரஸ் கூட்டணியைத் தொடருவது குறித்து தி.மு.க. தரப்பு உங்களிடம் கேட் டால்... பதில் என்னவாக இருக்கும்?''
''மிரட்டி, தேர்தலில் ஆதாயம் பார்க்கும் ஃபார்முலாவை கையில் எடுத்திருக்கிறது காங்கிரஸ். அச்சுறுத் தியே தங்களின் ஆசைகளை நிறை வேற்றப் பார்க்கிறார்கள். காங்கிரஸின் தயவைத் தேட வேண்டிய நிலையில் தி.மு.க. இன்று இல்லை. மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி இருக்கும் விதத்தில் அது, மிகுந்த வல்லமையோடு வரும் தேர்தலை எதிர்கொள்ளலாம்.
காங்கிரஸைக் கூட்டணியில் வைத்து இருப்பதன் மூலமாக தி.மு.க. நீங்காத பாவத்துக்கு ஆளானதுதான் மிச்சம். ஈழப் பிரச்னையே இதற்குக் காரணம். காங்கிரஸோடு சேர்ந்ததால் தி.மு.க-வுக்கு பலவீனமே என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதனால், காங்கிரஸ§க்காக பணிந்தோ, குனிந்தோ போக வேண்டிய அவசியம் தி.மு.க-வுக்கு இல்லை. தி.மு.க-வை டிமாண்ட் செய்து 78 ஸீட்டுகளுக்கு மேல் கேட்கிற முடிவில் இருக்கும் காங்கிரஸ், தேர்தல் முடிவுகளைப் பார்த்துக்கொண்டு... அதன் பிறகு தேவைப்பட்டால் கூட்டணி மந்திரி சபைக்கு வற்புறுத்தாது என்பதோ... அ.தி.மு.க. பக்கம் போகாது என்பதோ என்ன நிச்சயம்? ஈழத் துயரங்கள் ஆறாத ரணமாக இருக்கும் நிலையில், அதனைக் கீறிப் பார்க்கும் கொடூரமாக ராஜபக்ஷேக்கு ராஜ மரியாதை கொடுத்த காங்கிரஸ் கட்சியைக் கழற்றிவிட தி.மு.க. தயங்க வேண்டியதில்லை!''
- இரா.சரவணன்
படம்: என்.விவேக்


நன்றி : ஜூனியர் விகடன் 

No comments:

Post a Comment