Saturday, October 23, 2010

காந்தியிடம் நாம் எதைப் பின்பற்றலாம் ? - ரவிக்குமார்



‘‘நான் ஒரு காந்தியவாதி’’ என்று சொல்லிக்கொள்வது தன்னை நல்லவராகக் காட்டிக்கொள்ள விரும்புகின்ற ஒருவருக்கு மிகவும் எளிதானக் காரியம். காந்தி வலியுறுத்தியதில் (அங்கும் இங்குமாக ஏதோ சிலபேர்) கதர் சட்டை அணிந்திருப்பதைத் தவிர காங்கிரஸ்காரர்களிடத்தில் காந்தியின் தடயம் எதுவும் இப்போது மிச்சமில்லை. இருந்தபோதிலும் காந்தி என்ற குறியீட்டை அவர்கள் அவ்வளவு எளிதாக விட்டுவிட மாட்டார்கள். இப்போது காந்தியத்துக்கு காங்கிரசுக்கு அப்பால் இருந்தும்  சில ஆதரவுக்  குரல்கள் வெளிப்பட ஆரம்பித்துள்ளன. இதில் இந்தி சினிமாக்காரர்களும் அடக்கம்.
நுகர்வுக்  கலாச்சாரத்தின் பிடியில் சிக்கி சின்னாபின்னாமடைந்து கொண்டிருக்கும் படித்தவர்க்கமும், கோடிக்கணக்கான ரூபாய் கொட்டப்படுகின்ற பாராளுமன்ற மண்டபமும், அனாமதேயமாக வெடித்துச்  சிதறும் வெடிகுண்டுகளும், ஆங்காங்கே தலைக்காட்டும் மதவெறியும் மக்களை ஏதேனும் ஒரு தத்துவ புகலிடம் வேண்டும் என்பதை நோக்கி விரட்டிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சிலபேர் காந்தியத்தின் உதவியை இதற்காக நாடுவதை பார்க்க முடிகிறது. அவர்களில் சிலர் காந்தியத்தைப்  பாராட்ட தீண்டாத மக்களைப்  பகடைக்காய்களாக உருட்ட முற்படுகின்றனர். இது இந்திய அரசியலில் பழகிய ஒரு விளையாட்டுதான்.
தொண்ணூறுகளில் இந்திய அரசியலை ஆக்கிரமித்த மதவெறியை எதிர்கொள்வதற்கு இடதுசாரிகளும், மரபான பகுத்தறிவுவாதிகளும் காந்தியத்தைக்  கையிலெடுத்தனர். மதவாதத்தின் வேர் எங்கே இருக்கிறது என்பதைப் பற்றி ஆராய விருப்பமில்லாத அவர்கள் தமது போராட்டங்களுக்கு உடனடியாகவே ஒரு முற்போக்கு அடையாளத்தை கொடுத்துக்கொள்ள காந்தியை துணைக்கு அழைத்தது ஆச்சரியமானது அல்ல. ஆனால் இந்து மதவெறியை எதிர்கொள்வதற்கு காந்தி எந்த அளவுக்குப்  பயன்படுவார் என்பதை நாம் சிந்திக்கவேண்டும் . காந்தியத்தின் உள்ளீடே இந்துமதம் தான். அப்படி இருக்கும்போது அதை வைத்துக்கொண்டு எப்படி மதவாதத்தை எதிர்கொள்ள முடியும் என்பது ஒரு புதிர். மத நல்லிணக்கம் என்ற தங்களது கோஷத்துக்கு காந்தி 'பிராண்ட்' மிகவும் உபயோகமாக இருக்கும் என்பது அவர்களது எண்ணமாக இருந்திருக்கக்கூடும்.
காந்தியைப் புகழ்கிறவர்கள் அதற்காகச்  சொல்லுகின்ற பிற காரணங்கள் பற்றி நாம் அதிகம் கவலைப்படத்தேவையில்லை. ஆனால் அவர்தான் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களைக்   கைதூக்கி விட்டவர் என்பது போன்ற விமர்சனங்களும், அவர் குறித்து அம்பேத்கர் முன்வைத்த  கருத்துகள் அநியாயமானவை என்பது போன்ற சித்தி ரிப்புகளும் நம்மை இந்த விஷயத்தில் தலையிடத்தூண்டுகின்றன. இந்திய அரசியல்  கொதிநிலையில் இருந்த  1930களில் அம்பேத்கருக்கும், காந்திக்கும் நடந்த கருத்து பரிமாற்றங்கள் எத்தகையவை என்பதை இன்று எடுத்துக்கூறுவது  அவசியமாகி உள்ளது. இரண்டு விதத்தில் இது முக்கியமாக இருக்கிறது. ஒன்று தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு அரசியல் சக்தியாக அங்கீகரிக்கப்பட்ட அந்த காலத்தில் வட்டமேஜை மாநாட்டிற்குப்  பிறகு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்த மக்களுக்கு இரட்டை வாக்குரிமையுடன் கூடிய தனி வாக்காளர் தொகுதியை அளித்தபோது அதைத்  தடுத்து நிறுத்துவதற்காக காந்தி எவ்வாறு தனது உயிரையே பணயம் வைத்தார் என்பதை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச்சொல்வது அவசியமாக இருக்கிறது. அதன்மூலம் இன்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரிசர்வ் தொகுதி முறை என்பதைப் பற்றிய விமர்சனத்தை நாம் முன்வைக்க முடியும். இரண்டாவது, காந்தியைப் போலவே தாழ்த்தப்பட்ட மக்களை அன்பால் கொல்ல முற்படுகின்ற எவரையும் புரிந்து கொள்வதற்கு காந்தியம் குறித்த அம்பேத்கரின் விமர்சனங்கள் நமக்கு உதவி செய்கின்றன.
தாழ்த்தப்பட்டவர்களுக்கான பிரதிநிதித்துவம் பற்றிய விவாதம் தீவிரமாக நடந்துக்கொண்டிருந்த காலத்தில் ஒருநாள், அம்பேத்கர் காந்தியை சந்தித்து அவரோடு விவாதிக்கிறார். ‘‘எனது சமூகத்தினருக்கு அரசியல் அதிகாரம் தேவை. எங்களுக்கு அது மிகவும் அவசியம். எங்களுக்கான உரிமைகள் தரப்படவேண்டும் என்பதை நான் இந்துக்களிடம் உரத்துக்கூற விரும்புகிறேன்’’ என்று அம்பேத்கர் அப்போது குறிப்பிட்டார். அதில் கோபமடைந்த காந்தி ‘‘நான் பன்னிரெண்டு வயதிலேயே ஜனநாயகம் என்றால் என்ன என்பதை புரிந்துகொண்டு விட்டேன். எனது வீட்டில் வேலை செய்த துப்பரவு பணியாளரை தீண்டாதவராக எனது அம்மா நடத்தியபோது நான் என் அம்மாவிடம் சண்டை போட்டு இருக்கிறேன். ....எனது உயிரைக் காப்பாற்றுவதற்காக அரிஜன மக்களின் நலன்களை புறக்கணித்து விடவேண்டாம் என்று நான் எனது மகனிடம் ஒரு செய்தியை சொல்லி அனுப்பியிருக்கிறேன். நான் இறந்து போனால் எனது மகன் எனது வழியை பின்பற்றுவான். எனக்கு ஒரு மகன் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். இந்துயிசத்தின் பெருமையை காப்பாற்றுவதற்காக தனது உயிரைவிடத் துணியாத ஒருவன் எனது மகனாக இருக்க முடியாது. தீண்டாமை என்பதை வேரோடும், கிளையோடும் வெட்டி எறியாமல் இந்துயிசத்தின் பெருமையை காப்பாற்ற முடியாது. பார்த்தாலே தீட்டு என்று ஒதுக்கப்படுகிற ஒருவன் இந்த நாட்டின் வைஸ்ராயாக வரவேண்டும். நான் இந்தியாவுக்கு வந்ததும், ஆற்றிய முதல் உரையில் குறிப்பிட்டிருக்கிறேன். காங்கிரஸ் கட்சியின் தலைவராக தீண்டாத சாதியை சேர்ந்த ஒருவரை ஆக்குவேன் என்று நான் அப்போது உறுதியளித்து இருக்கிறேன்’’ என்று ஆக்ரோஷமாக குறிப்பிட்டார். ஆனால் காந்தி சூளுரைத்தது இதுவரை நடக்கவில்லை. தாழ்த்தப்பட்ட ஒருவர் காங்கிரசின் தலைவராக இதுவரை வரமுடியவில்லை. அதுபோலவே இந்த நாட்டின் பிரதமராக ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் இதுவரை வரவேயில்லை.
காந்தியால் மிகவும் பாராட்டப்பட்ட கோயில் நுழைவு திட்டத்தை அம்பேத்கர் ஏற்றுக்கொள்ளவில்லை. ‘‘எங்களுடைய கவனம் எல்லாம் அரசியல் அதிகாரத்தை பெறுவது பற்றியேதான் இருக்கிறது. எங்கள் பிரச்சனைக்கு அதன்மூலம் தான் தீர்வுகாண முடியும். இந்துக்களின் பார்வையை எங்களுடைய நிலை உயர வேண்டுமென்றால் எங்களுக்கு அரசியல் அதிகாரம் வேண்டும். .... நான் என்னை இந்து என்று அழைத்துக்கொண்டால் பிறப்பின் அடிப்படையில் நான் ஒரு தாழ்ந்த சாதியை சேர்ந்தவன் என்பதை நானே ஒப்புக்கொண்டாகி விடும்’’ என்று அம்பேத்கர் அப்போது காந்தியிடம் வாதிட்டார். இந்து இல்லை என்று சொல்லாதீர்கள். பூனா ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் நீங்கள் இந்து என்பதையும் ஏற்றுக்கொண்டு விட்டீர்கள் என்று அப்போது காந்தி அம்பேத்கரிடம் கூறினார். பூனா ஒப்பந்தத்தில் நான் அரசியல் அம்சத்தை மட்டும்தான் பெற்றுக்கொண்டேன் என்று அதற்கு அம்பேத்கர் பதிலளித்தார். கோயிலில் நுழைந்து வழிபட மட்டும்தான் எங்களுக்கு உரிமை வழங்கப்படுகிறது. கருவறைக்குள் நுழைந்து பூஜை செய்வதற்கு நீங்கள் அனுமதிப்பீர்களா? என்று அவர் காந்தியை கேட்டார். அதுமட்டுமல்லாமல் கோயிலுக்குள் நுழைவது பற்றி பேசும் நீங்கள், பொதுக்கிணறுகளில் எங்களை நீர் அள்ள அனுமதிப்பது பற்றி ஏன் கவலைப்பட மாட்டேன் என்கிறீர்? என்றும் அம்பேத்கர் வினவினார்.
காந்திக்குப்பிறகான இந்தியா என்ற நூலை எழுதியுள்ள ராமச்சந்திர குஹா, இன்றைய சூழலில் காந்தியிடம் இருந்து நாம் எவற்றையெல்லாம் பின்பற்ற முடியும் என்று நான்கு அம்சங்களை சுட்டிக்காட்டியிருக்கிறார். சுற்றுச்சூழல், மத நம்பிக்கை, சத்யாகிரகம், வெளிப்படையான அரசியல் வாழ்க்கை என்பவைதான் அவை. இந்த நான்கில் எது ஒன்றையும் காந்திக்கு மட்டுமே உரித்தானது என்று நாம் சொல்ல முடியாது. தொழில் மயம் ஆவதற்கு எதிரான காந்திய அணுகுமுறை இன்றைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு போராட்டங்களுக்கு நிச்சயம் பயன்படாது. அதுபோலவே அகிம்சை சார்ந்ததாக சொல்லப்படும் அவரது மத நம்பிக்கை உண்மையில் வன்முறையானதுதான் என்பதை ஊன்றிப்பார்த்தால் உணர்ந்துகொள்ள முடியும். சத்யாகிரகம் என்ற போராட்ட முறை இன்று அதிகாரத்தில் இருப்பவர்களால் எந்தளவுக்கு மதிக்கப்படுகிறது என்பதை நாம் பார்க்கவேண்டும். காந்தி உண்ணாவிரதம் இருந்தபோது அன்று ஆட்சியில் இருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அதை ஒரு போராட்டமாக மதித்தார்கள். இறங்கி வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் இன்று அதேபோல உண்ணாவிரதம் இருந்தால் என்ன நடக்கும்? எந்த அதிகாரியாவது அதற்கு மரியாதை தருவார்களா? அல்லது ஆட்சியாளர்கள்தான் கூப்பிட்டு பேசுவார்களா? ஆக ஒரு போராட்ட வடிவத்தின் மதிப்பும் மரியாதையும் நீங்கள் யாரை எதிர்த்து போராடுகிறீர்கள் என்பதை பொருத்தது. ஜனநாயகம் என்றால் என்னவென்றே தெரியாத இன்றைய ஆட்சியாளர்களிடம் சத்யாகிரக போராட்டத்தை நடத்த முடியுமா? பொதுவாழ்க்கையில் வெளிப்படைத்தன்மை என்பது உண்மையில் சிறந்த ஒரு கொள்கைதான். அதில் காந்தி குறிப்பிடத்தக்க அளவுக்கு உதாரணமாக திகழ்ந்திருக்கிறார் என்பதும் மறுக்க முடியாதது. அவர் காலத்தில் வாழ்ந்த பல தலைவர்கள் அப்படி இருந்திருக்கிறார்கள் என்ற போதிலும் காந்தி அளவுக்கு தனது வாழ்க்கையை திறந்து காட்டியவர்கள் என வேறு எவரையும் சொல்ல முடியாது. ஆனால் வெளிப்படைத்தன்மை என்பது வாழ்க்கையை எல்லோருக்கும் தெரிகிறமாதிரி நடத்துவதில் மட்டும் தங்கியிருக்கவில்லை. சிந்தனையில் வெளிப்படைத்தன்மை என்பதே மிகவும் முக்கியம். அந்த வகையில் பார்த்தால் காந்தியை வெளிப்படையான ஒரு மனிதர் என நாம் சொல்ல முடியாது. அவர் சொன்னது ஒன்று சிந்தித்தது இன்னொன்று  என்பதாக இருந்திருக்கிறது. ஆக, இன்று காந்தியிடம் பின்பற்றக்கூடிய சிறப்பான தனித்தன்மைகள் என்று எதுவுமே மிச்சமில்லை என்பதுதான் உண்மை. அதைத்தான் நாம் ராமச்சந்திர குஹாவின் வார்த்தைகளில் இருந்து தெரிந்து கொள்கிறோம்.
( அம்பேத்கர் எழுதிய ' காந்தியம் ' என்ற நூலுக்கு எழுதிய முன்னுரை ) 
காந்தியம் 
- அம்பேத்கர் 
வெளியீடு : கரிசல் பதிப்பகம் , சென்னை 
பிரதிகளுக்கு : manarkeni@gmail.com

1 comment:

  1. காந்தி அன்றைய நிலையில் இரட்டை வாக்குமுறையை எதிர்த்திராவிட்டால், அது தாழ்த்தப் பட்ட மக்களை ஒட்டு மொத்த சமூகத்தில் இருந்தே ஒதுக்கப்பட்டிருக்கக் கூடும். அம்பேத்கார் சட்ட அமைச்சராக ஆக முடியாமல் கூடப் போயிருக்கலாம். அதனால் இன்று கிடைத்துக் கொண்டிருக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் கூட தாழ்த்தப் பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்காமல் போயிருக்கலாம். அதுவரை தாழ்த்தப்பட்ட மக்களை மனிதராகக் கூட மதியாத ஆங்கிலேயேர்கள் திடீரென்று இந்தச் சலுகை வழங்கியது நம்மை பிரித்தாலும் சூழ்ச்சியே தவிர வேறொன்றுமில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டே காந்தி இரட்டை வாக்குமுறையை எதிர்திருக்கக் கூடும்.

    காந்தியத்திற்கு இன்றைய நாளில் எந்தவித மரியாதையும் இல்லை என்ற உங்கள் கருத்து முற்றிலும் உண்மை. மணிப்பூரில் மனித உரிமைக்காக ஒரு அரசாங்கத்தையே எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் சர்மிளாவே மிகச் சிறந்த சான்று.

    ஆனால் இந்தியா மாறிக் கொண்டு வருகிறது. படித்த மக்களிடம் ஏற்றத் தாழ்வுகள் குறைகின்றன. மக்கள் இன்று கல்வியால் மதிக்கப்படுகிறார்கள். எதையும் சிந்திக்கும் மன நிலையில் இருக்கிறார்கள். இதோ அயோத்தியா தீர்ப்பில் இந்தியாவின் எந்த ஒரு மூலையிலும் வன்முறைச் செயல்கள் நடந்தேரவில்லை என்பதே இதற்கு சாட்சி. மாற்றங்கள் ஒன்றே மாறாதது. மாறும்.

    ReplyDelete