Wednesday, October 20, 2010

‘ எங்களுடைய காலத்தில்தான் ஊழி நிகழ்ந்தது ’

‘ எங்களுடைய காலத்தில்தான் ஊழி நிகழ்ந்தது ’

 ( இது , முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் முதலாம் ஆண்டு நினைவு நாளின்போது மணற்கேணி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ' எங்கள் காலத்தில்தான் ஊழி நிகழ்ந்தது ' என்ற கவிதைத் தொகுப்புக்கு ரவிக்குமாரால்   எழுதப்பட்ட முன்னுரை. இத் தொகுப்பில் சேரன் , லதா , ரவிக்குமார் ஆகியோரின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன. தற்போது அ. யேசுராசா ,வா.ஐ.ச.ஜெயபாலன் ஆகியோரின்  கவிதைகள் சிலவும் சேர்க்கப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ' waking is another dream' என்ற தலைப்பில் நூலாக வெளிவர இருக்கிறது. ( navayana publishing)) ‘ எதிர்காலத்தைச் செதுக்குவதற்கு யுத்தம் என்ற உளி பயன்படாது ’ என்று சொன்னார் மார்ட்டின் லூதர் கிங். ஆனால் எதிர்காலத்தைச் சீரழிப்பதற்கு அது நன்றாகவே பயன்படும் என்பதை உலகெங்கும் நடந்துகொண்டிருக்கும் யுத்தங்கள் மெய்ப்பித்துவருகின்றன. ஒரு போர் நடக்கும்போது அதில் முதலில் பலியாவது ‘உண்மை ‘ தான் எனச் சொல்வார்கள். போர்க்களத்திலிருந்து கடைசியில் அகற்றப்படும் சடலமும் உண்மையின் சடலம்தான். அந்த சடலத்தை எளிதாகப் புதைத்துவிட முடியாது என்பதால்தானோ என்னவோ அதை அகற்றுவதற்கு எவரும் முன்வருவதில்லை. புதைக்கப்படும் உண்மையின் சடலம் கண்ணிவெடியைப்போலக் காத்திருக்கிறது. அது வெடிக்கும்போது அதன்மீது கட்டப்பட்ட பொய்களின் மாளிகைகள் தகர்ந்து விழுகின்றன. ஈழத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலைகளை ஏறத்தாழ உலகம் மறந்துவிட்ட நிலையில் இலங்கையிலிருந்து செயல்படும் ‘மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யு.டி.எச்.ஆர்) என்ற அமைப்பு விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 158 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை 2008ஆம் ஆண்டு பின்பகுதியிலிருந்து ஈழத்தமிழர் மீதான யுத்தம் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட 2009 மே 18ஆம் தேதி வரை நடந்த நிகழ்ச்சிகளை விரிவாக தொகுத்திருக்கிறது. மே மாதம் 8ஆம் தேதி துவங்கி 18ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் என்ன நடந்தது என்பதை அங்கிருந்த நபர்களின் நேரடியான வாக்குமூலங்கள் மூலமாக இந்த அறிக்கையில் பதிவு செய்திருக்கிறார்கள். ஈழத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலைகள் குறித்து தமிழக வெகுசன ஊடகங்களில் வெளியாகிவந்த செய்திக்கட்டுரைகள் யாவும் யூகங்கள் மற்றும் கட்டுக்கதைகளையே அடிப்படையாகக் கொண்டிருக்க கடந்த 2009 டிசம்பர் 13ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட  யு.டி.எச்.ஆர் அமைப்பின் அறிக்கைமட்டும்தான் அந்தக் கொடூரங்களை முதன்முதலாக விரிவான முறையில் ஆவணப்படுத்தியிருக்கிறது.இந்த அமைப்பு விடுதலைப்புலிகளையும், இலங்கை அரசாங்கத்தையும் ஒருசேர விமர்சிக்கின்ற ஒரு அமைப்பாகும்.
இலங்கை அரசு எவ்வளவு கொடூரமாகத் தமிழர்களைப் படுகொலை செய்தது. அப்படிச் செய்துவிட்டு இன்றுவரை எவ்வாறு இந்தியாவையும், உலக நாடுகளையும் அது ஏமாற்றி வருகிறது என்ற விவரங்களையெல்லாம் விரிவாக இந்த அறிக்கையில் தொகுத்திருக்கிறார்கள். பல்வேறு நபர்களை விசாரித்து தடையங்களைச் சேகரித்து மிகவும் ஆதாரபூர்வமாக இந்த அறிக்கையை அவர்கள் தயாரித்திருக்கிறார்கள். யுத்தப்பகுதிகளில் சிக்கிக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கையைச் சொல்லும்போது இலங்கை அரசு எத்தகைய ஏமாற்றுத் தந்திரங்களைக் கையாண்டது, இன்றைக்கும்கூட அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களின் எண்ணிக்கையை வைத்துக்கொண்டு அது எப்படியெல்லாம் விளையாடுகிறது என்பதை இந்த அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது. ஈழ யுத்தத்தில் 2009 ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் முதல் வாரம் வரை சுமார் மூவாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் சில தெரிவித்தன. ஆனால், அந்த மக்களிடையே பணியாற்றிக்கொண்டிருந்த ‘தமிழர் புனர்வாழ்வுக் கழகம்’ என்ற அமைப்பினரோ அந்த காலக்கட்டத்தில் தினம் 60லிருந்து 90 பேர் வரை கொல்லப்பட்டு வந்தார்கள். எனவே கொல்லப்பட்டது சுமார் 6,500 பேர் வரை இருக்கலாம் என ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். அங்கு வேலை செய்துகொண்டிருந்த செஞ்சிலுவை சங்கத்தினரின் மதிப்பீடோ இன்னும் அதிகமாக இருந்தது. புலிகளின் சுகாதாரத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த பெண் மருத்துவர் ஒருவரோ இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 37 ஆயிரம் இருக்கும் எனக் கூறியுள்ளார்.
முள்கம்பி முகாம்களிலிருந்து ஏராளமானோர் தமது சொந்த வீடுகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக இங்கிருக்கும் ‘ எம்பட்டட் இன்டெலக்சுவல்கள்‘ வாக்குமூலம் வழங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் இந்த அறிக்கையோ தங்கள் சொந்த வீடுகளுக்குச் செல்ல வேண்டும் என விருப்பப்பட்ட தமிழர்கள் அனுபவிக்கும் துன்பங்களை விவரிக்கிறது. நன்றாக விசாரணை செய்த பிறகுதான் முகாம்களில் இருப்பவர்களை விடுவிக்க முடியும் என்று இலங்கை அரசு கூறி வருகிறது. விசாரணை என்ற பெயரில் மேலும் மேலும் மனித உரிமை மீறல்கள்தான் நடத்தப்படுகின்றன. எவரை வேண்டுமானாலும் புலிப்படையில் இருந்தவர் எனக்கூறி சித்ரவதை செய்வதற்கு சிங்கள ராணுவத்தினருக்கு இப்போது நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை அவர்கள் தவறவிட விரும்பவில்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் தமிழர்களை அவர்கள் இழிவுபடுத்தி சித்ரவதைசெய்கிறார்கள். இளம்பெண்கள் தங்களது தலைமுடியை கிராப் கட்டிங் செய்திருந்தால் அவர்களெல்லாம் புலிகளின் படையில் இருந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். முகாம்களில் இருப்பவர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு சிங்கள ராணுவ வீரர்கள் எவ்வாறு ஊழல் செய்கிறார்கள் என்பதையும் இந்த அறிக்கை வெளிப்படுத்தியிருக்கிறது.
முகாம்களிலிருக்கும் பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுகிறார்கள் என அவ்வப்போது வெளியாகும் ஒருசில செய்திகளைத்தவிர அவர்களுடைய உண்மை நிலை எதுவும் வெளிவருவதில்லை. பொழுது சாய்ந்த பிறகு ஒரு வேனில் வருவது, முகாம்களில் இருக்கும் இளம்பெண்களை மட்டும் தனியாகப் பிரித்து அவர்களையெல்லாம் அந்த வேன்களில் அழைத்துச் செல்வது, மீண்டும் அதிகாலை நேரத்தில் கொண்டுவந்து விடுவது என சிங்கள ராணுவத்தினர் தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகிறார்கள். அப்படி அழைத்துச் சென்று கூட்டிவரப்படும் பெண்கள் தமக்கு நேர்ந்த அவமானங்களை ஏற்கவும் முடியாமல், வெளியில் சொல்லவும் துணிவு இல்லாமல் மனம் புழுங்கிச் சாகிறார்கள்.
முகாம்களில் மட்டுமின்றி மருத்துவமனைகளிலும்கூட சிங்கள ராணுவத்தினரின் கொடுமைகளுக்குக் குறைவில்லை. வவுனியா மருத்துவமனைக்கு  சிங்கள ராணுவத்தினர் அடிக்கடி வந்து  அங்கே சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களில் பலரைப் பிடித்துச் சென்றது பற்றியும், அப்படி ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட ஒருத்தர்கூட முகாம்களுக்குத் திரும்ப வரவில்லை என்பது குறித்தும் அந்த மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிய ஒருவர் சொல்லிய தகவல்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. மருத்துவமனையில் உள்ளவர்கள் பற்றி சரியான பதிவுகள் எதுவும் இல்லாத காரணத்தினால் ஒருவர் எங்கிருந்து கொண்டு வரப்பட்டார் என்பதையோ, அவர் ராணுவத்தால் எங்கே அழைத்து செல்லப்பட்டார் என்பதையோ சோதித்தறிய வழியில்லாமல் போய்விட்டது என்பதையும் இந்த அறிக்கை பதிவு செய்துள்ளது.
இந்திய அரசை இலங்கையிலுள்ள ராஜபக்ஷ அரசு எவ்வாறெல்லாம் ஏமாற்றியிருக்கிறது என்ற விவரங்களையும் இந்த அறிக்கையில் பதிவு செய்திருக்கிறார்கள். முகாம்களின் நிலைமையைப் பற்றி சர்வதேச தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் சொல்ல முற்பட்டபோது அவர்களுடைய விசா அனுமதியை ரத்து செய்துவிடுவோம் என்று மிரட்டியதோடு மட்டுமின்றி அவர்கள் மீது வழக்கு தொடுப்போம் என்றும் இலங்கை அரசு மிரட்டி வந்தது. அதனால், பலர் வாய்மூடிக்கிடக்க வேண்டியதாயிற்று. 2006ஆம் ஆண்டு பிற்பகுதியில் இந்தியாவின் உதவியோடு அனல்மின் நிலையம் ஒன்றைக் கட்டுவதற்கு இலங்கை அரசு ஒப்பந்தம் செய்தது. அந்த மின் நிலையத்துக்கான இடத்தை சம்பூர் என்ற பகுதியில் தேர்வு அது செய்திருந்தது. அந்தப் பகுதியில் குடியிருந்த மக்களை அங்கிருந்து காலி செய்வதற்காக அப்பகுதியின் மீது இலங்கை அரசு வான்வழித் தாக்குதலை நடத்தியது. கடுமையான குண்டு வீச்சின் காரணமாக அப்பகுதி மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டது மட்டுமின்றி எஞ்சியிருந்தவர்களெல்லாம் தமது வீடுகளைக் காலி செய்துவிட்டு வேறு இடம் தேடி ஓட வேண்டிய நிலை உண்டாயிற்று. அவர்கள் மீண்டும் அந்தப் பகுதிக்கு திரும்ப முடியாதபடி இலங்கை அரசு தடை விதித்து விட்டது. இவையெல்லாம் இந்தியாவுக்குத் தெரிந்தே நடந்தவைதான். மார்ச் 2009ல் இந்திய அரசு மருத்துவமனை ஒன்றை யுத்தமுனையில் திறந்தது. அங்கு ஏராளமானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு பணியாற்றிய மருத்துவர்கள் இலங்கை அரசின் தமிழர் விரோத அணுகுமுறையை நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார்கள். ஒருமுறை அந்த மருத்துவமனைக்கு பஷில் ராஜபக்சே சில பத்திரிகையாளர்களை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். அப்போது அங்கிருந்த இந்திய மருத்துவர் ஒருவர் பஷில் ராஜபக்சேவைப் பார்த்து ஒரு தோட்டாவின் சிதைந்த பாகங்களை எடுத்துக்காட்டி ‘‘இதை நான் ஆறு வயது குழந்தை ஒன்றின் இதயத்திற்கு அருகில் அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுத்தேன். நீங்கள் பயங்கரவாதிகளைத்தான் சுடுகிறேன் என்று சொல்கிறீர்களே ஆறு வயது குழந்தை ஒரு பயங்கரவாதியா?’’ என்று ஆவேசமாகக் கேட்டார். பஷில் ராஜபக்சே பதில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறி விட்டார். இந்தியா நடத்திய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டவர்களை வெளி உலகுக்குத் தெரியாமல் மறைத்ததன் மூலம் காயம் பட்டவர்களின் எண்ணிக்கையை இலங்கை அரசு குறைத்துக் காட்டியது. இப்போதும்கூட கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக இலங்கை அரசுக்கு இந்தியா உதவி வருகிறது. ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டவர்களின் புதைகுழிகள் உலக நாடுகளின் கவனத்துக்கு வந்துவிடக் கூடாதே என அஞ்சிய இலங்கை அரசு அதனால்தான் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு உலக நாடுகள் பல உதவி செய்ய முன்வந்தும் ஏற்றுக்கொள்ள மறுத்து இந்தியாவோடு சேர்ந்து அவற்றை அகற்றி வருகிறது. இதை  இந்திய அரசின் துரோகமாகவே ஈழத்தமிழர்கள் கருதுகிறார்கள். ‘ படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் புதைகுழிகள் வெளியுலகுக்குத் தெரிந்தால் போர் குற்றங்களுக்காக இலங்கை ஆட்சியாளர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும். எனவே, அவர்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் இந்தியா தற்போது கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது ’ எனத் தமிழ் மக்கள் கருதுகிறார்கள். இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடந்தபோது மத்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க ஈழத்தில் நடத்தப்பட்ட போரின் வேகம் சற்று மட்டுப்படுத்தப்பட்டதாக அப்போது செய்திகள் வெளியாயின. ஆனால், அங்கே நடந்த போரைப் பற்றி எல்லா விவரங்களையும் சேகரித்திருக்கும் இந்த அறிக்கை, இந்தியாவின் வேண்டுகோளுக்கிணங்கி இலங்கை அரசு எந்தச் சலுகையையும் காட்டவில்லை. மாறாக இந்திய பொதுத்தேர்தல் முடிவதற்குள் அங்கே போரை முடிவுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில்தான் இலங்கையின் ஆட்சியாளர்கள் குறியாக இருந்தார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த அறுபது ஆண்டு காலமாக இலங்கையின் அரசியல்சூழல் எவ்வாறு பேரினவாத அரசியலால் மாசுபடுத்தப்பட்டது என்பதை இந்த அறிக்கை விரிவாக எடுத்துரைத்துள்ளது. தற்போது இலங்கையின் ஆட்சியாளர்கள் வெற்றிக்களிப்பில் இருந்தபோதிலும், இனப்பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் அங்கு ஒருபோதும் அமைதி ஏற்படாது என்பதை கோடிட்டுக் காட்டியுள்ள இந்த அறிக்கை இதற்காக தமிழர்கள் மீண்டும் தனியே ஆயுதமேந்திப் போராடுவது சரியான வழியாக இருக்காது என்கிறது. தற்போது இலங்கையில் நிலவும் அரசியல் சூழல் ஜனநாயகத்தை விரும்பும் அனைத்துத் தரப்பினருக்குமே ஆபத்தானதாகத்தான் இருக்கிறது. எனவே அங்கே ஜனநாயகத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு தமிழர்களைப் போலவே சிங்களர்களுக்கும் உண்டு என சுட்டிக்காட்டியிருக்கும் இந்த அறிக்கை, இரண்டு இனங்களையும் சேர்ந்த அரசியல் தெளிவு கொண்ட ஜனநாயக சக்திகள் சேர்ந்து செயல்படும்போதுதான் இலங்கையின் விஷச்சூழல் மாறும் என்று கூறியுள்ளது.  போர் நடந்தபோது அதைக் கண்ணால் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் இந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன. இலக்கியவாதிகளெல்லாம் மௌனித்துப்போய்விட்ட நிலையில் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை ரத்தம் அப்பிய சொற்களால் எடுத்துச் சொல்கின்றன அந்த வாக்குமூலங்கள்.


@@@@@@@@@@

      ஈழத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலையைப் பார்த்தவர்கள் பேச ஆரம்பிக்கும்போதுதான் அதன் கொடூரம் முழுமையான அளவில் வெளியுலகுக்குத் தெரியவரும். ஆனால், உண்மையைப் பேசினால் அதற்குக் கிடைக்கும் பரிசு மரணம்தான் என்ற நிலையில் இன்று மௌனமே அவர்களுடைய மொழியாக மாறிவிட்டது. அவர்களைத் தேடிச் சென்று உண்மையைச் சொல்லுங்கள் என்று கேட்பவர்களிடத்தில்கூட எதையும் சொல்லக்கூடிய நிலையில் அவர்கள் இல்லை. ஏனென்றால் எல்லா இடங்களிலும் சிங்கள ராணுவத்தின் காதுகள் தாங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கின்றன என்பது தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும். தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மரணத்தின் குரூர விழிகளையும் தாண்டி தம்முடைய துயரக் கதைகளை ஒருசிலர் பேச முன்வந்திருக்கிறார்கள். அப்படியானவர்கள் சொல்லியவற்றை ‘மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள்’ (யூ.டி.ஹெச்.ஆர்.) வெளியிட்டுள்ள அறிக்கை பதிவு செய்துள்ளது. அதில் இடம் பெற்றுள்ள ஒரு வாக்குமூலத்தை இங்கே தமிழில் சுருக்கித் தருகிறேன்:
‘‘கிளிநொச்சி வீழ்ந்ததற்குப் பிறகு மக்களெல்லாம் ஒருவரோடு ஒருவர் தொடர்பிழந்து கிழக்கு திசையை நோக்கி ஓட ஆரம்பித்திருந்தார்கள். 2009 ஜனவரி மாத மத்தியில் நான் மோட்டார் சைக்கிள் ஒன்றில் விசுவமடுவுக்குக் கிழக்கால் எனது நண்பர் ஒருவரைத் தேடிச் சென்று கொண்டிருந்தேன். ஒரு வீட்டின் முன்புறம் நாற்காலி ஒன்றில் ஒருத்தர் உட்கார்ந்திருந்தார். அவருடைய மனைவிக்கு சுமார் நாற்பத்தைந்து வயதிருக்கும். அருகில் அவர் சமைத்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் இரண்டு இளம்பெண்கள் அமர்ந்திருந்தார்கள். எனது நண்பரின் முகவரியைச் சொல்லி அந்த ஆளிடம் விசாரித்தபோது, சுமார் ஐம்பது பேர் கூடியிருந்த ஒரு இடத்தை அவர் சுட்டிக்காட்டினார். அங்கே போவதற்காக நான் எனது மோட்டார் சைக்கிளை ‘ஸ்டார்ட்‘ செய்தேன். மோட்டார் சைக்கிளுக்கு மண்ணெண்ணையைத்தான் எரிபொருளாக பயன்படுத்தி வந்தேன் என்பதால் அது ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் பண்ணியது. அந்த சமயத்தில் ஏதோ ஒரு சத்தம். உள்ளுணர்வின் தூண்டுதலால் அது ஒரு குண்டு என்பதைப் புரிந்து கொண்டு நான் சடாரென்று தாவி பக்கத்திலிருந்த குழிக்குள் விழுந்தேன். அருகில் பெரிய வெடிச்சத்தம் கேட்டது. சில நிமிடங்கள் கழித்துத் தலையை உயர்த்திப் பார்த்தேன். எனக்கு வழி சொன்ன ஆளின் கால்களுக்கிடையேதான் குண்டு விழுந்திருந்தது. அந்த ஆளைக் காணவில்லை. அருகில் அமர்ந்திருந்த இரண்டு பெண்களும் இறந்து கிடந்தார்கள். சமைத்துக் கொண்டிருந்த பெண்மணி வலியில் அலறிக் கொண்டிருந்தார். அவரது கால்கள் இரண்டும் குண்டு வெடித்ததில் பிய்த்துக் கொண்டு போயிருந்தது. அவருடைய ரத்தம் அடுப்பிலிருந்த குழம்பில் சிந்திக் கிடந்தது. அவருடைய கறியும் அந்தக் குழம்போடு சேர்ந்து கலந்து கிடந்தது. ‘என்னை விட்டுவிட்டுப் போகாதே. ஹாஸ்பிட்டலுக்குக் கொண்டு போ’ என்று அந்தப் பெண்மணி என்னிடம் கெஞ்சினார். நான் அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லத்தான் விரும்பினேன். ஆனால், அருகாமையில் மருத்துவமனை எதுவும் இல்லை. என்னால் முடிந்ததெல்லாம் அவர் அருகில் கொஞ்ச நேரம் நின்றதுதான். அதற்குள் அவருடைய உயிர் பிரிந்து விட்டது.
நான் இரணபாலையில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றேன். அங்கு சிங்கள ராணுவத்தின் கிஃபிர் விமானங்கள் குண்டு வீசின. நான் ஒரு பங்கருக்குள் ஒளிந்து கொண்டேன். பதினைந்து அடிக்கு அப்பால் ஆயிரம் கிலோ எடை கொண்ட குண்டு ஒன்றை சிங்கள விமானம் வீசிவிட்டுப் போனது. அந்த குண்டு பூமியில் பெரிய பள்ளம் ஒன்றை ஏற்படுத்தியது. அது வீசப்பட்டபோது, நான் பதுங்கியிருந்த பங்கர் ஒரு தொட்டிலைப் போல ஆடியது. அதிர்ஷ்டவசமாக அந்த குண்டு வெடிக்கவில்லை. பிறகு புலிகள் அங்கே வந்து அந்த குண்டை செயலிழக்கச் செய்தார்கள். அந்த குண்டிலிருந்து 600 கிலோ வெடி மருந்தை அவர்கள் எடுத்துச் சென்றார்கள்.
சில நாட்களுக்குப் பிறகு ஆனந்தபுரம் என்ற ஊரில் நண்பர் ஒருவர் வீட்டில் நான் அமர்ந்திருந்தேன். அப்போது சிங்கள ராணுவத்தின் விமானங்கள் குண்டு வீசுவதற்காக வருவதைப் பார்த்தோம். மக்களெல்லாம் திறந்த வெளியை நோக்கி ஓடினார்கள். திறந்த வெளியில் நின்று கொண்டால் அவர்களெல்லாம் சிவிலியன்கள் என்று நினைத்து ராணுவத்தினர் குண்டு வீசாமல் போய் விடுவார்கள் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்தது. நானும் அங்கே ஓட முயற்சித்தேன். அப்போது எனது நண்பர் என்னைப் பிடித்து இழுத்தார். மேலே பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து ‘ஏர் பாம்கள்’ வீசப்பட்டன. அந்த வகை குண்டுகள் பூமிக்கு மேலேயே வெடித்துச் சிதறும் தன்மை கொண்டவை. அவை வெடித்த போது வெட்டவெளியில் நின்று கொண்டிருந்த பதினைந்து பேர் உடல் சிதறி செத்துப்போனார்கள். சில நிமிடங்களில் விமானத்திலிருந்து ‘தாமதமாக வெடிக்கும்‘ ( ஸ்லோ பாம்) ஆயிரம் கிலோ எடை கொண்ட குண்டு ஒன்று வீசப்பட்டது. அது அருகாமையிலிருந்த கோயிலின் மீது விழுந்தது. அது விழுந்தபோது ஒரு ஆள், ஒரு ஆடு, சில பாத்திரங்கள் போன்றவையெல்லாம் ஒரு தென்னைமர உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டதை நான் பார்த்தேன்.
இரணபாலையில் நான் தங்கியிருந்த போது சிங்கள விமானங்கள் நடத்திய குண்டு வீச்சால் ஏராளமான பேர் இறந்து போனதைப் பார்க்க முடிந்தது. பிப்ரவரி மாதம் பதினாறாம் தேதி அங்கு சிங்களப்படை குண்டு வீசியபோது காயம் பட்டவர்களை மீட்கிற பணியில் நானும், நண்பர்களும் ஈடுபட்டோம். குண்டு வீச்சில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும்தான். அவர்கள்தான் வீடுகளில் தங்கியிருந்தார்கள். ஆண்களில் பெரும்பாலோர் பங்கர்களைக் கட்டுகின்ற பணிக்காக வெளியில் சென்றிருந்தார்கள். குடியிருப்புகள் மீது வீசப்பட்ட குண்டுகள் மிகவும் பயங்கரமானவை. அவை வெடித்ததும் அந்தப் பகுதியில் காற்றில் இருக்கும் ஆக்ஸிஜனை உறிந்துகொள்ளும். அதனால் காற்றில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகும். அந்தப் பகுதியிலிருக்கும் எல்லாவற்றையும் ஒரு புள்ளியைநோக்கி அது உறிஞ்சும். இதனால் சுற்றுப்புறத்தில் இருப்பவர்கள் மூச்சடைத்து செத்துப்போவது மட்டுமல்லாமல், அவர்களுடைய உடைகளெல்லாம் நார்நாராகக் கிழிந்து போய்விடும். செத்துக்கிடக்கும் உடல்களெல்லாம் நிர்வாணமாகவே கிடக்கும். அருகாமையிலிருந்த பங்கருக்குள் இளம்பெண்கள் பலர் ஒளிந்து கொண்டிருந்தார்கள். அந்த குண்டு வீசப்பட்டதில் எல்லோருமே ஒட்டுமொத்தமாக கொல்லப்பட்டார்கள். நான் அவர்களைக் கடந்து ஓடும்போது யாரோ எனது கால்களைப் பிடித்து இழுப்பது தெரிந்தது. திரும்பிப் பார்த்தேன். பதினாறு, பதினேழு வயதிருக்கும் ஒரு இளம்பெண் தன் இரண்டு கைகளாலும் எனது கால்களைப் பிடித்துக் கொண்டிருந்தார். அவர் கீழே கிடந்தார். அவரது இடுப்புக்குக் கீழே உடம்பு எதுவுமில்லை. கால்களுக்குப் பதிலாக இரண்டு எலும்புகள்தான் நீட்டிக்கொண்டிருந்தன. ஆனால் அவர் பேசினார். ‘‘அண்ணா, நான் உன்னுடைய தங்கையாக இருந்தால் என்னை இப்படி விட்டுவிட்டுப் போவாயா? என்னைக் காப்பாற்று’’ என்று கதறினார். எனக்கு கூடப்பிறந்த தங்கை எவரும் கிடையாது. அவரை என்னுடைய தங்கையாகவே அப்போது நான் எண்ணிக்கொண்டேன். திகைத்துப்போய் ஒரு கணம் நின்றேன். அதற்குள் அவருடைய மூச்சு அடங்கி விட்டது. அந்த நேரத்தில் ஒரு பெண் என்னை நோக்கிக் கூவியபடி ஓடிவந்துகொண்டிருந்தார். ஒரு பத்து மீட்டர் தொலைவில் வந்திருப்பார். திடீரென்று அவர் சரிந்து விழுந்தார். கிட்டே சென்று பார்த்தேன். அவரது தலையின் பின்புறம் குண்டு ஒன்றால் பெயர்த்தெடுக்கப்பட்டிருந்தது. அங்கு சுமார் இருபத்தைந்து பெண்களின் சடலங்கள் சிதறிக் கிடந்ததைப் பார்க்க முடிந்தது.
ஒரு நாள் நான் வலைஞர்மடம் பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன். ஒரு கர்ப்பிணிப் பெண்ணை பின்னால் உட்கார வைத்தபடி ஒரு இளைஞன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். அவர்களுக்கு வழி விட்டு நான் எனது வண்டியை மெதுவாக செலுத்தினேன். அவர்கள் முன்னே சென்றார்கள். சில மீட்டர் தூரத்தில் திடீரென்று அந்த மோட்டார் சைக்கிள் சரிந்து விழுவதைப் பார்த்தேன். அருகில் சென்று பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை ஓட்டிய கணவன் மீது சிங்கள ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்ட குண்டு பாய்ந்திருந்தது. அந்தக் கர்ப்பிணிப் பெண் தனது கணவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு என்னிடம் கெஞ்சிக் கதறினாள். அந்தப் பக்கம் போய்க்கொண்டிருந்த ஒருத்தர்கூட அங்கே நின்று என்னஏதுவென்று அந்தப் பெண்ணிடம் விசாரிக்கவில்லை. அந்தப் பெண்ணின் கணவனுடைய முகத்தில் குண்டு பாய்ந்திருந்தது. அவனது கீழ்த்தாடை சுத்தமாக பிய்த்தெறியப்பட்டிருந்தது. வாயிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்துக்கொண்டிருந்தது. அவன் உயிர் பிழைப்பான் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அந்தப் பெண்ணின் கதறலைப் பொருட்படுத்தாமல் தலையைக் குனிந்தபடி நானும் அவர்களைக் கடந்து செல்லவே விரும்பினேன். அப்படிப் போவது எங்களுக்கெல்லாம் நன்றாகப் பழகிப்போயிருந்தது. தலையைக் குனிந்தபடி போகவில்லையென்றால் ஒளிந்திருக்கும் சிங்கள ராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டுக்கு எந்த கணமும் பலியாக நேரலாம் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் அப்போது அந்த இளைஞனை நான் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல ஆசைப்பட்டேன். மோட்டார் சைக்கிளில் எனது பின்புறமாக அவனை ஏற்றி என்மீது சாய்த்து வைக்கும்படி அவனது மனைவியிடம் சொன்னேன். அவனைச் சுமந்தபடி நான் மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்தேன். இறங்கும்போதுதான் தெரிந்தது, ஏற்கனவே அவன் இறந்து போயிருந்தான்.
ஒருநாள் காலையில் நான் போய்க்கொண்டிருந்தபோது ஒரு ஆர்.பி.ஜி ஷெல் எனக்கு முன்னால் விழுந்து வெடிப்பதைப் பார்த்தேன். திரும்பி ஓடினேன். எதிரே வந்தவர்களிடத்தில் அங்கே போகாதீர்கள். ஆமிக்காரன் சுடுகிறான் என்று கத்தினேன். ஆனால், எவரும் என்னைப் பொருட்படுத்தவில்லை. ஒருபுறம் குண்டுகள் விழுந்து வெடித்துக் கொண்டிருக்க மக்கள் தங்கள்பாட்டுக்கு போய்க்கொண்டே இருந்தார்கள். எங்கள் வாழ்க்கை அப்படி ஆகிப்போயிருந்தது. ஒருபுறம் பங்கருக்குள் குழந்தைகள் ஒளிந்திருப்பார்கள். பக்கத்தில் சில குழந்தைகள் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருப்பார்கள். எப்போது வேண்டுமானாலும் ஒரு குண்டு விழலாம். தங்கள் உயிர் போகலாம் என்பது குழந்தைகளுக்குக்கூட நன்றாகத் தெரிந்திருந்தது. ஆனால், மரணத்தைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
மே மாதம் முதல் வாரத்தில் நான் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்தேன். தொடர்ந்து நாங்கள் இருந்த பகுதியின்மீது சிங்கள ராணுவத்தின் குண்டுகள் பொழிந்து கொண்டிருந்தன. எங்கு பார்த்தாலும் காயம் பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் என்று கோரக்காட்சிகள். உணவு கிடையாது. மனிதர்கள் பங்கருக்கு உள்ளேயும், வெளியேயும் செத்துக் கொண்டிருந்தார்கள். உயிர் வாழ்வதைப் பற்றி எவருக்குமே கவலையில்லை. அங்கிருந்த மருத்துவமனை செயல்படாமல் கிடந்தது. மருந்துகளோ, மருத்துவர்களோ இல்லை. எப்போது வேண்டுமானாலும் மரணம் தாக்கலாம் என்ற நிலையில் அங்கிருந்தவர்கள் தமது உறவினர்களோடு நெருக்கமாக இருக்க விரும்பியதைப் பார்த்தேன். சாகும்போது எல்லோரும் ஒன்றாகச் சாகவேண்டும். ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்து விடக்கூடாது என்பது மட்டும்தான் அங்கிருந்தவர்களின் ஒரே எண்ணமாக இருந்தது. போராளிகளுக்கும் எந்தவித வாய்ப்பும் இருக்கவில்லை. சண்டை போடுவது அல்லது சாவது என்ற நிலையில் அவர்கள் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். அங்குதான் நான் அதுவரை பார்த்திராத இனிமேல் ஒருபோதும் பார்க்க விரும்பாத அந்தக் காட்சியை பார்த்தேன். பசி கொண்ட நாய்கள் சுற்றிலும் சிதறிக் கிடந்த மனிதர்களின் உடல் உறுப்புகளைக் கடித்துக்குதறி தங்கள் பசியை ஆற்றிக்கொண்டிருந்தன. எங்கு பார்த்தாலும் மரணத்தின் துர்நாற்றம்.  சாவுப்பறை அடிப்பது போல குண்டுகள் தொடர்ந்து வீழ்ந்து வெடித்துக்கொண்டிருந்தன.
மே மாதம் பதினாறாம் தேதி மாலை நாங்களெல்லாம் தப்பித்து ஓடிக்கொண்டிருந்தோம். சாலை ஓரங்களில் காயம் பட்ட போராளிகள் குவியல் குவியலாகக் கிடநதார்கள். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள். அவர்களைக் காப்பாற்றுவதற்கு செஞ்சிலுவை சங்கத்தை சிங்கள ராணுவம் அனுமதிக்கவில்லை. ‘யாராவது சயனைடு கொடுத்து எங்களைக் கொன்று விடுங்களேன்’ என்று அந்தப் பெண்கள் கதறிக் கொண்டிருந்தார்கள். மிகவும் சிறுவயது பெண்கள் இந்த உலகத்தையோ, தங்களுடைய விதியையோ அறியாத பெண்கள். அன்றிரவு எங்காவது படுத்துத் தூங்கவேண்டும் என்று பாதுகாப்பாய் ஒரு இடத்தைத் தேடினேன். ஒரு டிராக்டர் நின்று கொண்டிருந்தது. அதன் கீழே பாயைப் போர்த்திக் கொண்டு ஒருத்தர் படுத்திருப்பது தெரிந்தது. நானும் இங்கே படுத்துக் கொள்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். அவர் அமைதியாக இருந்தார். சரியென்று நான் அவர் அருகில் படுத்துக்கொண்டேன். காலை விழுத்தெழும்போதுதான் என்னருகில் படுத்திருந்தது ஒரு மனிதர் அல்ல, இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே கொல்லப்பட்ட ஒருத்தரின் பிணம் என்பது தெரிந்தது.’’

                      

@@@@@@@@@@
ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையின்போது சர்வதேச நியதிகள் யாவும் மீறப்பட்டன என்பது எல்லோருக்குமே தெரியும். போரின் கடைசி நாட்களில் இலங்கை அரசோடு புலிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையும், ஆயுதங்களைக் கைவிட முன்வந்ததையும் நாம் அறிவோம். அவர்களை வெள்ளைக் கொடியேந்தி சரணடையச் சொன்னதன்பேரில் அதை ஏற்று முன்னே சென்றவர்கள் ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்டதையும் உலக நாடுகள் அறிந்துதான் உள்ளன. பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்திருந்த அப்பாவி மக்கள் அப்படியே புல்டோசர்களால் புதைத்து சமாதியாக்கப்பட்டது உலகில் எங்குமே நடந்திராத பச்சைப் படுகொலையாகும். அப்படி கொல்லப்பட்டவர்கள் ஒருவர், இருவர் அல்ல. பல்லாயிரக்கணக்கான மக்கள் அவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட மே 17ஆம் தேதிக்குப் பிறகும்கூட முள்ளிவாய்க்கால் பகுதியில் தொடர்ந்து படுகொலைகள் செய்யப்பட்டு வந்துள்ளன. ஆங்காங்கே தப்பியோடிப் பதுங்கியிருந்தவர்களையும் விட்டுவைக்காமல் தேடித்தேடி இலங்கை ராணுவம்கொன்று குவித்திருக்கிறது.
போரின் இறுதியில் பிடித்து செல்லப்பட்ட தமிழ் இளைஞர்களை நிர்வாணப்படுத்தி அவர்கள் கண்களையும், கைகளையும் கட்டி அவர்களை சுட்டுக்கொல்லும் வீடியோ காட்சிகள் சில மாதங்களுக்கு முன்னால் உலகமெங்கும் வெளியாகின. அப்போது அவையெல்லாம் பொய் என்று சிங்கள அரசாங்கம் மறுத்து வந்தது. ஆனால், அந்த வீடியோ காட்சிகளை அறிவியல் பூர்வமாக சோதனை செய்த ஐ.நா. சபை அது உண்மையான வீடியோதான் என்பதை அதன்பின்னர் உறுதி செய்தது. ஐ.நா. சபையில் உள்ள, சட்டவிரோதமான படுகொலைகள் குறித்து ஆராயும் பிரிவுக்கு பொறுப்பாயுள்ள பிலிப் ஆல்ஸ்டன் என்பவர் இதுகுறித்து அறிக்கையொன்றையும் வெளியிட்டார். அதுமட்டுமின்றி 2009 டிசம்பர் 18ஆம் தேதி இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றையும் அவர் எழுதியிருந்தார். அதில், விடுதலைப்புலிகளின் தலைவர்கள் நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் ஆகியோர் அவர்களது குடும்பத்தினரோடு 2009மே மாதம் 17ஆம் தேதி இரவு இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டது பற்றிய உண்மை விவரங்களைத் தெரிவிக்குமாறு அவர் கேட்டிருந்தார். ‘‘போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்த நாளுக்கு முன்தினமான 2009, மே மாதம் 17ஆம் தேதி நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகிய புலிகளின் மூன்று தலைவர்களும் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதிக்கு வடக்குபுறமாக ஒரு இடத்தில் சிக்கிக் கொண்டனர். தூதர்களின் மூலமாக அவர்கள் உங்கள் அரசைத் தொடர்பு கொண்டு இலங்கை ராணுவத்திடம் தாங்கள் சரணடைய விரும்புவதாக தெரிவித்துள்ளனர். ராணுவத்துறை செயலாளரும், உங்கள் அரசுக்கு ஆலோசகர்களில் ஒருவராக உள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் அவர்களை வெள்ளைத் துணியேந்தி வருமாறு கூறியுள்ளனர். அந்த சமயத்தில் போர் முனையிலிருந்த இலங்கை ராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவின் தலைவருக்கு ராணுவ ஆலோசகரிடத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. சரணடையவந்த புலிகளின் தலைவர்கள் மூவரையும் சுட்டுக்கொல்லுமாறு அதில் கூறப்பட்டுள்ளது. மே பதினெட்டாம் தேதி அதிகாலையில் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகிய மூவரும் வெள்ளைத் துணிகளைப் பிடித்தபடி ராணுவத்தை நோக்கிச் சரணடைய வந்தபோது அவர்கள்மீது இலங்கை ராணுவத்தினர் சரமாரியாகச் சுட்டு அவர்களைப் படுகொலை செய்துள்ளனர். அவர்களோடு வந்த அவர்களது குடும்பத்தினரையும் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர்’’ என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்த பிலிப் ஆல்ஸ்டன், இந்த விவரங்களையெல்லாம் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் எனவும், சம்பவம் நடத்த நேரத்தில் இலங்கை ராணுவத்தோடு சென்று கொண்டிருந்த பத்திரிகையாளர் சிலரும் இந்தத் தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும் அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார்.
1949ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட ஜெனிவா ஒப்பந்தத்தில் இலங்கை அரசும் கையெழுத்திட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் பிரிவு& 3 போர்க்காலத்தில் கடைபிடிக்கப்பட வேண்டிய நியதிகள் பற்றிக் கூறுகிறது. ‘‘போரில் நேரடியாக பங்கெடுக்காதவர்கள், போரில் ஈடுபட்டுள்ள வீரர்களின் குடும்பதினர், ஆயுதங்களைக் கைவிட்டுச் சரணடைய முன்வந்தவர்கள், காயத்தாலோ, நோயாலோ பாதிக்கப்பட்டவர்கள், சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் ஆகியோர் மனிதாபிமான முறையில் நடத்தப்பட வேண்டும்’’ என்று அது வலியுறுத்துகிறது. அதுபோலவே சர்வதேச மனித உரிமைச் சட்டங்களும், ஆயுதங்களைக் கைவிட்டவர்களைக் கொல்லக்கூடாது என்பதை வலியுறுத்துகின்றன. இலங்கையில் நடத்தப்பட்டுள்ள இனப்படுகொலையானது சர்வதேச சட்டங்களுக்கும், நியதிகளுக்கும் எதிரானது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. எனவே இதைப்பற்றி இலங்கை அரசு விளக்கமளிக்க வேண்டும் என பிலிப் ஆல்ஸ்டன் வலியுறுத்தியிருந்தார். அவர் எழுதிய கடிதத்தின் இறுதியில் மூன்று விஷயங்களுக்கு அவர் முக்கியத்துவம் தந்திருந்தார். போரில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் உண்மைதானா? அதை நீங்கள் மறுப்பீர்களேயானால் அப்படி இனப்படுகொலை எதுவும் நடக்கவில்லை என்று ஆதாரங்களோடு நிரூபிக்க உங்கள் அரசு முன்வர வேண்டும். நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரது குடும்பத்தினர் கொல்லப்பட்டது குறித்து நீங்கள் தரும் விளக்கம் என்ன? இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்து நாங்கள் தெரிவித்துள்ள கருத்துகளைப் பரிசீலித்து அதற்கு நீங்கள் பதில் கூறவேண்டும் என ஆல்ஸ்டன் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலைகளுக்காக ஐ.நா. சபையே விளக்கம் கேட்டுள்ள நிலையில், ஐ.நா. சபையைச் சேர்ந்த அதிகாரிகளேகூட இந்த இனப்படுகொலைக்குக் காரணமாக இருந்தார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. ஐ.நா. பொதுச்செயலாளரின் தலைமை செயலாளராக இருக்கும் விஜய் நம்பியார் ஈழத்தில் நடந்த யுத்தத்தின் கடைசி கட்டத்தில் ஒரு சமாதானத் தீர்வை எட்டுவதற்காகப் பலரிடமும் அணுகிப் பேசிவந்தார். யுத்தத்தின் கடைசி நாட்களில் புலிகளின் மூத்த தலைவர்கள் சிலர் விஜய் நம்பியார் வழியாக சமாதானம் பேச முற்பட்டனர். அவர்கள்தான் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். புலிகளின் மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதில் விஜய் நம்பியாருக்கும் பங்கு உள்ளது என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே, அவர்மீதும் ஐ.நா. சபை விசாரணை நடத்தவேண்டும் என்று தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
யு.டி.எச்.ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சில முக்கியமான பிரமுகர்கள் யுத்தம் முடிந்து பலமாதங்களுக்குப் பிறகும்கூட கொலைசெய்யப்ப்ட்டார்கள் என்ற விவரம் பதிவாகியுள்ளது. வன்னி டெக் என்னும் நிறுவனத்தின் இயக்குனராயிருந்த கதிர்வலு தயாபரராஜா என்பவர் எப்படிக் கொல்லப்பட்டார் என்ற விவரம் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த பாலகுமார் தனது மகனோடு சரணடைந்து ராணுவத்தினால் கூட்டிச் செல்லப்பட்டும் அவர் எங்கு இருக்கிறார் என்பதை ராணுவம் ரகசியமாக வைத்துள்ளது என்று குற்றம் சாட்டியிருக்கும் இந்த அறிக்கை தயாபரராஜாவுக்கு நடந்ததை விரிவாக எடுத்துக் கூறியுள்ளது.
வன்னி டெக் என்ற அமைப்பு சுயேச்சையாக நடத்தப்பட்டுவந்த ஒரு அமைப்பாகும். சில காலத்துக்குப்பிறகு புலிகள் அந்த அமைப்பைத் தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டனர். அதற்குத் தேவையான டீசல், ஜெனரேட்டர் முதலானவற்றைப் புலிகள் வாங்கித்தந்தனர். அதன் இயக்குனராக இருந்த தயாபரராஜா தனக்கென்று சம்பளம் எதையும் வாங்கிக்கொண்டதில்லை. அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த உதயகலா என்பவரும் தயாபரராஜாவும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்துவந்தனர். அந்தத் திருமணம் புலிகளுக்கு உடன்பாடாக இல்லாத காரணத்தால் அவர் தனது பதவியைவிட்டு விலகிவிட்டார். அந்த நேரம் புதுக்குடியிருப்புப் பகுதியில் யுத்தம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. தனது பதவியிலிருந்து விலகி மனைவியோடு வெளியேறிய தயாபரராஜா இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். உளவுத்துறையின் விசாரணைக்கென்று அவர் அழைத்துச் செல்லப்பட்டார். கொழும்புவுக்கும் அதன் பின்னர் அடையாளம் தெரியாத ஒரு முகாமுக்கும் அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தயாபரராஜாவும், உதயகலாவும் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டனர். போர் முடிந்து பல மாதங்கள்வரை அவர்கள் சித்ரவதை செய்யப்படுவது நிற்கவே இல்லை. இடையிடையே தயாபரராஜாவின் மனைவியான உதயகலாவின் பாட்டி அவர்களைச் சென்று சந்தித்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் சித்ரவதை செய்யப்பட்ட விவரம் அவருக்கு நன்றாகத் தெரியும். இதனிடையே கடந்த 2009 செப்டம்பர் பதினைந்தாம் தேதி தயாபரராஜா இறந்து விட்டார். அதற்கு முன் இப்படி யாராவது இறந்தால் அவர்களைப் புலிகள்தான் கொன்றுவிட்டார்கள் என்று இலங்கை ராணுவம் எளிதாகப் பொய் சொல்லித் தப்பித்துக்கொண்டுவிடும். ஆனால், புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்ட சூழலில் இலங்கை ராணுவம் எவர்மீதும் பழிபோடுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தயாபரராஜா சடலமாகக் கண்டெடுக்கப்பட்டபோது, அவரது மார்பில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த காயங்கள் இருந்தன. தயாபரராஜாவின் மனைவி உதயகலா இப்போது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், அவரால் நடக்கக்கூட முடியாத நிலை. அந்த அளவுக்கு அவர் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். இப்படி மேலும் பல சம்பவங்களை இந்த அறிக்கை பதிவுசெய்திருக்கிறது.


@@@@@@@@@@

      போரில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ள ராஜபக்ச தமிழர்களுக்கு சமஉரிமை அளித்து இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பார் என்று நம்புவதற்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை. சிங்களப் பேரினவாதத்தை மேலும்மேலும் தண்ணீர் ஊற்றி வளர்ப்பதன் மூலமே தன்னைப் பலப்படுத்திக்கொள்ளமுடியும் என்பது ராஜபக்சவுக்குத் தெரியும். எனவே அத்தகைய அணுகுமுறையைத்தான் அவர் மேற்கொள்வார். அதன் அடையாளங்கள் இன்று அங்கே வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்து விட்டன. புதினப்பலகை என்ற இணையதளத்தில் புகைப்படங்களோடு வெளியாகியுள்ள கட்டுரையொன்று இதைத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது. ’ஓமந்தையில் இருந்து கிளிநொச்சி வரைக்கும் வீதியின் இரண்டு புறமும் இருந்த மரங்கள் எல்லாம் இன்று முற்றாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. அங்கெல்லாம் இருநூறு மீட்டர் தூரத்திற்கு ஒன்றாகக் காவல்அரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் காவல்அரண்களுக்கு அருகில்தான் மீளக்குடியமர்த்தப்பட்ட தமிழ் மக்களின் குடியிருப்புகள் உள்ளன. சிறுசிறு இந்துக் கோவில்களுக்கு உள்ளேகூட புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு தமிழ் மக்களின் தனித்துவமான சமய அடையாளம் சிதைக்கப்படுகிறது. வழிகாட்டிப் பலகைகள் எல்லாவற்றிலும் இப்போது ஊர்ப்பெயர்கள் சிங்களத்தில் இரண்டு முறை எழுதப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் என்ற ஊரின் பெயர் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு, அதற்கு மேல் யாழ்ப்பாணம் என்று உச்சரிக்கும்படியாக சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளது. அதற்குக்கீழே அந்த ஊருக்கு சிங்களவர்கள் தற்போது சூட்டியுள்ள சிங்களப் பெயர் எழுதப்பட்டிருக்கிறது. யாழ்பாணத்துக்கு ’யாப்பா பட்டுவ’ என்று சிங்களவர்கள் இப்போது பெயர் சூட்டியுள்ளனர். வணிகத் தலங்கள் யாவும் சிங்களவர்களின் ஆதிக்க மையங்களாக மாறியுள்ளன. சிறுசிறு நடைபாதைக் கடைகளைக்கூட அவர்களே நடத்துகிறார்கள். தமிழர்களின் கோட்டையாகக் கருதப்பட்ட கிளிநொச்சியில் எங்கு பார்த்தாலும் இப்போது சிங்கள வியாபாரிகளே நிறைந்திருக்கிறார்கள். கிளிநொச்சி நகரில் மிகப்பெரிய புத்த வழிபாட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது. இலங்கை ராணுவத்தின் போர் வெற்றியை அறிவிக்கும் விதமான பல நினைவுச் சின்னங்கள் தமிழர் பகுதிகள் எங்கும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. தமிழர் பகுதிகள் யாவும் சிங்களமயப்படுத்தப்பட்டு வருகின்றன.’ என்கிறது அக்கட்டுரை.
     இந்த நிலையை அங்குள்ள தமிழர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? நாம் கற்பனை செய்தும்பார்க்கமுடியாத வன்முறையை அனுபவித்த அந்த மக்கள் தமது உள்ளக்கிடக்கையை எழுத்தில் வடிக்கிறார்களா? எண்பத்துமூன்றாம் ஆண்டு வெடித்த இனக் கலவரம் அங்கிருந்து ஆற்றல்மிக்கக் கவிஞர்களை நமக்கு அறிமுகப்படுத்தியது. அவர்களது கவிதை நூல்கள் தமிழ்நாட்டின் அரசியல் கவிதைகளின் போக்கையே மாற்றியமைத்தன. எம்.ஏ.நுஹ்மானின் மழைநாட்கள் வரும்; சிவசேகரத்தின் நதிக்கரை மூங்கில்; அ.யேசுராசாவின் அறியப்படாதவர்கள் நினைவாக; சேரனின் இரண்டாவது சூரியோதயம்;வ.ஐ.ச.ஜெயபாலனின் சூரியனோடு பேசுதல்; வில்வரத்தினத்தின் அகங்களும் முகங்களும், ஈழத்துப் பெண்கவிஞர்களின் சொல்லாத சேதிகள்; நுஹ்மானும் சேரனும் தொகுத்த மரணத்துள் வாழ்வோம், பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் & இப்படி எத்தனையெத்தனை நூல்கள். அவர்கள் நடத்திய அலை, அதன்பிறகு வெளிவந்த சரிநிகர் என எததனையெத்தனை சஞ்சிகைகள். தமிழ்நாட்டில் அறிவுத்தளத்தில் ஈழப்பிரச்சனைக்கான ஆதரவு இத்தகைய நூல்களால்தான் உருவானது. இந்தப் படைப்பாளிகள்தான் அதை சாத்தியப்படுத்தினார்கள். அந்த நூல்களெல்லாம் இங்கே பதிப்பிக்கப்பட இங்கிருந்த அறிவிஜீவிகள் அப்போது உதவினார்கள். தமிழவன், எஸ்.வி.ராசதுரை, பொதியவெற்பன், க்ரியா ராமகிருஷ்ணன் என ஒரு நீண்ட பட்டியலையே சொல்லலாம். ஒருபுறம் புலிகளின் ஆதரவாளர்கள் கண்ணீர்க் கண்காட்சிகளை நடத்திக்கொண்டிருக்க இன்னொருபுறம் சப்தமில்லாமல் இந்தப் புத்தகங்கள் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தன. இவற்றுக்கு அப்பால் மார்க்சிய லெனினிய இயக்கத்தினர் தேசிய இனப் பிரச்சனை குறித்து ஆழமான விவாதங்களை நடத்திக்கொண்டிருந்தார்கள். இந்தியாவின் பல மாநிலங்களிலுமிருக்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் பிரச்சனைகளோடு சேர்த்து தமிழ் இனப் பிரச்சனை ஆராயப்பட்டது. இதில் தமிழ்ப் படைப்பாளிகள் மட்டுமின்றி குமாரி ஜெயவர்த்தனே போன்ற சிங்கள அறிஞர்களின் பங்களிப்பும் இருந்தது. இன்று அவற்றையெல்லாம் பழமை ஏக்கத்தோடு எண்ணிப்பார்த்துப் பெருமூச்செறிகிறேன். வெறும் உணர்வுநிலையில் மட்டும் நிற்காமல் அறிவுபூர்வமான ஆதரவாக வெளிப்பட்ட ஈழ ஆதரவு’ குரல்கள் தமிழகத்தில் நசிந்துபோனதற்கான காரணங்கள் எவை என்பதும் ஆராயப்படவேண்டும்.

 முள்ளிவாய்க்காலின் துயரத்துக்கு ஓராண்டு ஆகப்போகிறது. அதைத் தமிழ் அறிவுலகம் எப்படி நினைவுகூரப்போகிறது? கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் இப்படி மனம் நசிந்துகொண்டிருந்தபோது சேரன் எழுதிய பழைய கவிதையொன்று பார்வையில் பட்டது. 1999 ஆம் ஆண்டு செப்டம்பரில் எழுதப்பட்ட அந்தக் கவிதை இப்போது எழுதப்பட்டதுபோல இருந்தது. கவிஞர்களின் தொலைநோக்கு ஆற்றலை எண்ணி நான் வியந்துபோனேன். அந்தக் கவிதையை மின்னஞ்சலில் நண்பர்களோடு பகிர்ந்துகொண்டேன்:

ஊழி


எங்களுடைய காலத்தில்தான்
ஊழி நிகழ்ந்தது
ஆவிக் கூத்தில் நிலம் நடுங்கிப்
பேய் மழையில் உடல் பிளந்து
உள்ளும் வெளியும் தீ மூள
இருளின் அலறல்
குழந்தைகளை  மனிதர்களை
வெள்ளம் இழுத்துவந்து
தீயில் எறிகிறது

அகாலத்தில் கொலையுண்டோம்
சூழவரப் பார்த்து நின்றவர்களின்
நிராதரவின் மீது
ஒரு உயிரற்ற கடைக்கண் வீச்சை
எறிந்துவிட்டு
புகைந்து புகைந்து முகிலாக
மேற் கிளம்பினோம்

காஃப்காவுக்குத்தான் தன்னுடைய எழுத்துக்களைத்
தீயிலிட வாய்க்கவில்லை
ஆனால் சிவரமணி எரித்துவிட்டாள்
அந்தர வெளியில் கவிதை அழிகிறது
மற்றவர்களுடைய புனைவுகள்
உயிர்பெற மறுக்கின்றன

எல்லோரும் போய்விட்டோம்
கதைசொல்ல யாரும் இல்லை

இப்பொழுது இருக்கிறது
காயம்பட்ட ஒரு பெருநிலம்
அதற்கு மேலாகப் பறந்து செல்ல
எந்தப் பறவையாலும் முடியவில்லை
நாங்கள் திரும்பி வரும் வரை

    இக்கவிதையில் இடம்பெற்றிருக்கும் சில வரிகள் என்னை மிகவும் அலைக்கழித்தன. . 1991 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்துகொண்டார் சிவரமணி. அப்போதுதான் உருப்பெறத்தொடங்கியிருந்த ஈழத்துப் பெண் கவிஞர்களின் குரல்களுக்குள் வலுவாகவும் தீர்க்கமாகவும் ஒலித்த குரல் அவருடையது. தான் சாவதற்குமுன் தன்னிடமிருந்த தனது கவிதைகளையெல்லாம் அவர் எரித்துவிட்டார். ’என்னுடைய நாட்களை/ நீங்கள் பறித்துக்கொள்ள முடியாது/. கண்களைப் பொத்திக்கொள்ளும் / உங்கள் விரல்களிடையே/ தன்னை கீழிறக்கிக்கொள்ளும்/ ஒரு குட்டி நட்சத்திரம் போன்று/ எனது இருத்தல் உறுதிபெற்றது ’ என்று எழுதிய சிவரமணி சுதந்திரத்தை மறுத்த அதிகாரத்துவத்துக்குத் தனது மரணத்தின்மூலம் எதிர்ப்பைத் தெரிவித்தார். ஆனால் அதிலிருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளக்கூடிய பொறுமை போராளிகளுக்கு இருக்கவில்லை. அதனால், தமது கருத்துகளைச் சொல்ல முயன்றவர்கள் அங்கே ‘அகாலத்தில் கொலையுண்டார்கள்‘.‘சூழவரப் பார்த்து நின்றவர்கள் எதையும் செய்யக்கூடியவர்களாயில்லாதபோது‘‘ ‘அந்தரவெளியில் கவிதை அழிய, மற்றவர்களுடைய புனைவுகளோ உயிர்பெற மறுத்துவிட்டன.’ அப்படி மௌனமானவர்களின் நீண்ட பட்டியல் ஈழத்தில் உண்டு.
   நுண்ணுணர்வு கொண்டவர்கள் ஒரு இடத்தில் இருக்கும்போது அங்கே சுதந்திரம் மதிப்பு பெறுகிறது. அவர்களெல்லோரும் வாய்மூடி மௌனமாகிவிடும் இடத்தில் யாருடைய ஆட்சி நடக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.அங்கிருந்து எப்படிக் கவிதை வரும்? ஈழத்திலிருந்து முன்புபோலக் காத்திரமான கவிதைக் குரல்கள் ஒலிக்காமல் போனதற்குக் காரணம் என்ன என்ற என் கேள்விக்கு சேரனின் கவிதையில் பதில் இருப்பதுபோல் படுகிறது. ‘எல்லோரும் போய்விட்டோம் / கதைசொல்ல யாரும் இல்லை ... என்ற வரிகளிலும் அவற்றைத் தொடர்ந்து ‘ இப்பொழுது இருக்கிறது / காயம்பட்ட ஒரு பெருநிலம் / அதற்கு மேலாகப் பறந்து செல்ல / எந்தப் பறவையாலும் முடியவில்லை / நாங்கள் திரும்பி வரும் வரை ‘ என்ற வரிகளில் அந்தப் பதிலை நான் உணர்ந்தேன். நாங்கள் என்பது புலம்பெயர்ந்து சென்றுள்ள சேரன் போன்ற கவிஞர்களைக் குறிக்கும் குறுகிய பொருள் கொண்ட சொல் அல்ல. அதிகாரத்துவத்துக்குப் பணியாத, சுதந்திர வேட்கை கொண்ட படைப்புக் குரல்கள் அனைத்தையும் குறிக்கின்ற சொல் அது. இந்தச் சிறிய தொகுப்பு அத்தகைய குரல்களைப் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சி, அவ்வளவுதான்.    சென்னை.5
    12 05 2010                                                                                                _ ரவிக்குமார்

No comments:

Post a Comment