Wednesday, October 27, 2010

காற்றின் விதைகள் - தேன்மொழி
விதை என்பது உயிர்சுழி. வாழ்க்கை முழுதாய் அடங்கிய ஒற்றைப்புள்ளி. விதையின் இருப்பு மரத்திற்கும் நிலத்திற்கும் இடையே கைமாறிக் கொண்டே இருக்கிறது. காற்றின் விதைகள் தங்கள் இருப்பை எழுத காற்றின் திசைகளில் நிலத்தைத் தேடி பயணிக்கின்றன. காற்றும் நிலமும் விதைகளை வேடிக்கைப் பொருளாக்கி விளையாடித் தீர்க்கின்றன. பெண்கள் எதிர்கொள்ளும் சமூகம் என்பது, காற்றில் பரவும் விதைகளுக்கு ஊடகமான காற்றும் நிலமும் போல அவர்கள் இருப்பை நிலைபடாததாக வைக்கிறது. 

இயற்கை உயிருள்ள, உயிரற்ற பொருட்களை எல்லாம் தகவமைத்துக் கொள்வதன் மூலம் தப்பித்துக்கொள்ளும்படி அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறது. இயற்கையின் எச்சரிக்கை மொழியாக உருவெடுத்திருப்பதன் சாட்சிதான் ரவிக்குமாருடைய “சூலகம் - பெண்கள் எதிர்கொள்ளும் சமூகம்” கட்டுரைத்   தொகுப்பு - விதைகள் நீருக்காகவும் நிலத்திற்காகவும், காற்றிற்காகவும் தங்களை வேண்டியபடி தகவமைத்துக் கொள்கின்றன. காற்றை ஊடகமாக்கிக் கடந்து செல்லும் விதைகளுக்குக் கூடுதல் தகவமைதல் தேவைப்படுகிறது. உண்மையில் விதைகள் காற்றைச் சுமக்க வேண்டியுள்ளது. தாங்கள்  ஊன்றப்படுவதற்காக நிலத்தை இழுத்துக் கூட்டிக் கொண்டு பயணிக்கின்றன. நிலத்தை இழுத்துக் கொண்டு காற்றைச் சுமந்தபடி பறக்கும் அவைகள் கூடுதல் சுமையாளிகள். காற்று ஒருவேளை விதைகளைக் கடலில் கொண்டு சேர்த்து விடலாம். காற்று விதைகளைக் கடலில் கொண்டு சேர்க்கும் இடமாகத் தான் பெண்கள் எதிர்கொள்ளும் சமூகம் உள்ளது என்பதை சூலகம் கட்டுரை தொகுப்பு முன் வைக்கிறது.
“மாற்றம் என்பது இயற்கை” இந்தப் பழமொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. இலக்கியங்களும், தத்துவங்களும் மாறிமாறி வெவ்வேறு அர்த்தங்களில் எழுதி பார்த்த சொல் மாற்றம். மாற்றம் நிலையாமையை முன் வைக்கிறது. ஆழ்ந்து நோக்கினால்  இயலாமையில் எடுக்கப்படும் முயற்சி தான் மாற்றமாக உருவெடுக்கிறது. பெண்களின் உலகம் மாற்றங்கள் நிறைந்தது.  பெண்களை தகவமைத்துக் கொள்ள, அதிகப்படியாயும், மறைமுகமாயும் இச்சமூகம் வற்புறுத்துகிறது.
மாற்றத்தை விரும்பும், கோரும் அல்லது முன்னெடுத்துச் செல்லும் சமூகம் அதன் மூலம் அல்லது $ந்தம் தொலைக்கப்படுவது குறித்த அக்கறையை காட்ட மறுக்கிறது. வினைபடுபொருளில் தொடங்கும். மாற்றம் வினைவினை பொருளில் முடிகிறது. வினைவினை பொருட்கள் தீயவையாகவும் இருக்கும் சாத்தியங்கள் உண்டு. நிகழ்காலத்தை சுமந்திருக்கும் சமூக மாற்றங்களில் பல பெண்களுக்கு எதிரானது என பகுத்து பிரித்து வைக்கிறது ரவிக்குமாரின் சூலகம். 
சூலகம் சுமந்து கொண்டிருக்கும் பெண்களை பருவத்தின் வளர்ச்சியை அடிப்படையாக வைத்து மூன்றாக பிரித்துக் கொள்ளலாம்.
1) சிசுக்கள், குழந்தைகள் மற்றும் சிறுமிகள்
2) இளம் பெண்கள்
3) பெண்கள்
 நாம் கொலை செய்த ஒருகோடி பெண் சிசுக்கள் என்ற கட்டுரையில் குழந்தைகளுக்கான செயல்பாட்டுக் குழுவின் அறிக்கை ஒன்றைக் குறிப்பிடுகிறார். பக்க - 13

 படிக்கும் போது நாம்    மனிதர்களோடு தான் வாழ்கிறோமா என்ற பயம் எழுகிறது. பசிக்காக திருடியவனுக்குக் கூட நம்மிடம் சட்டங்களும் தண்டனைகளும் நிறைய இருக்கின்றன. சிசுக்கள் என்பவை  விதைகளின் முதல் துளிர். பெண் சிசுக்களை கையிடுக்கில் வைத்து நசுக்கி விடுகிறோம். மனித நேயத்தை பசுத்தோலாய் போர்த்தியிருக்கும் மானுடத்தைக் காறி உமிழ்ந்து விட்டு அவைகள்  மறைந்துபோவது நமக்குத் தெரிவதில்லை. 

 பெண்களின் உலகை இச்சமூகம் குழந்தைத் திருமணம், பொட்டுக் கட்டுதல் போன்ற கொரில்லா போர் முறைகளால் தாக்கிக்கொண்டே இருக்கிறது. பெண்களிடத்தில் விழிப்பு நிலை மந்தமாகவே உள்ளது ( பக்கம் - 18.)

 இச்சமூகமும், மொத்த மானுடப்  பரப்பும் தனது வளர்ச்சிக்கு பெண்களை பலியாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. படைப்பாளி முன் வைக்கும் பிரச்சனைகளால் பெண்களின் உலகம் காற்றின் விதைகளாய் அடித்து செல்லப்படுவது புரிகிறது. நொய்டா  படுகொலைகளை வறுத்து விழுங்கி செரித்து விட்டு, எளிதாக ஒரு குற்றத்தைக் கடந்து செல்லப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். ரவிக்குமார் போன்ற சில படைப்பு மனங்கள்  அதைச் சுமந்து கொண்டு சமுதாயத்தில் மனிதநேயத்தை இழுத்து வந்து திணிப்பது பாராட்டுதலுக்கும் நன்றிக்கும் உரியது.
 பெண்கள் தங்களைப் பற்றி மறந்து விடுகிறார்கள் என்பதை விடவும், தங்களை தொலைத்து விடுகிறார்கள். அவர்களைப் பற்றிய பிரக்ஞை மழுங்கடிக்கப்படும் நேரத்தில் அவர்களே சந்தித்திராத ஒன்றாய், ஒரு தோழனின் மனதோடு பெண்களின் கருப்பை புற்றுநோய் பற்றியும், பேறு கால விடுப்பு பற்றியும், இடஒதுக்கீடு, பெண் உடல் மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் கொடுமை பற்றியும், எய்ட்ஸைக் குணப்படுத்தும் முயற்சியில் பலியாகும் பெண்கள் குறித்தும் அக்கறையோடு முன் வைக்கப்படும் கட்டுரைகளில் மனித உறவுகளின் மீதுள்ள கரிசனையை எழுதிச்செல்கிறார். 

 பிரதீபா - முதல் குடிமகள்,  பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கு கிடைத்த நீதி குறித்த கட்டுரைகளில் பெண்ணுரிமையின் வளர்ச்சியை, பெண்மை மீட்கும் உரிமையைக் கைதட்டி ஆர்ப்பரித்துக் கொண்டாடும் படைப்புமனத்தைக் காண முடிகிறது.
 சமூகம் பெண்களைச் சுற்றிக் கற்கோட்டைகளையும், கலாச்சார மதில்களையும் எழுப்புகிறது. அதில் பெண்கள் தங்கள் மழுங்கடிக்கப்பட்ட தூரிகைகளால், சித்திரம் வரைந்தபடி இருக்கிறார்க்ள. அவர்கள் உலகம் சித்திரத்துள் அடைபட்டுக்கிடக்கிறது. அங்கு எழுப்பப்படாத கேள்விகளையும் கருத்துகளையும் ரவிக்குமார் தன் கட்டுரைகளில் பல இடங்களில் முன் வைக்கிறார்.

 ஒரு நலவாரியம் அமைத்துத் தர முடியும் என்ற எல்லைவரை, அவர்  புழக்கடை மனிதர்களை, சமுதாயத்தின் பொதுபுத்திக்கும் பார்வைக்கும் தன் எழுத்துக்களால் அடையாளப்படுத்தி உள்ளார். இன்று உழைப்பாளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச கூலியை, அரசு உறுதி செய்துள்ளது என்பது தொடர்பான கட்டுரை எழுத்தும் இலக்கியமும் என்ன செய்யும் என்ற கேள்வியின் பதில்களாக நிற்கின்றன.பெண் சிறைவாசிகள் குறித்த ஒரு சிறு சிந்தனை பொறிகூட நம்மை இயக்கியதில்லை என்ற குற்றவுணர்வைப் பெண் சிறைவாசிகள் குறித்த கட்டுரை உண்டாக்கிவிடுகிறது. 

தூரத்தில் தெரியும் நிலத்தில் இருக்கிறது புனலில் ஆடும் படகின் நம்பிக்கை. இது போன்ற கட்டுரைகள் பெண்களின் தடுமாற்ற இருப்பு நிலையில்  நம்பிக்கைகளாகத் தெரிகின்றன.    
சூலகம் - - - பெண்கள் எதிர்கொள்ளும் சமூகம் 
-ரவிக்குமார் 
உயிர்மை வெளியீடு
டிசம்பர் 2009   

No comments:

Post a Comment