' இன்று ஒரு தகவல் ' நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்று விளங்கிய தென்கச்சி சுவாமிநாதன் 2005 ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகளின் தமிழ்ப் பெயர் ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆற்றிய உரை .
அனைவருக்கும் என்னுடைய வணக்கம். இந்த அரங்கத்திற்கு முதலில் வந்து கடைசியாக பேசுகிறேன். படிக்கும் காலத்திருந்தே எப்பொழுதும் நான் கடைசிதான். இந்த அரசியல் ஈடுபாடு எனக்கு இல்லையென்றாலும்கூட, நான் மிகவும் நேசிக்கின்ற ஒரு அரசியல் தலைவர் திருமாவளவன் அவர்கள்தான். ஏனென்றால் அவர் அரசியல் வாதி மாதிரி இல்லை. எப்படியென்றால் நம்முடைய சனாதிபதி அப்துல்கலாமை தில்லி சென்றபோது ஒரு வடநாட்டு பத்திரிகை, இப்போதுதான் சனாதிபதி மாளிகைக்குள் முதல் முறையாக ஒரு மனிதன் புகுந்திருக்கிறார். அவர் சனாதி பதியாகாமல் பார்த்துக் கொள்வது நம்முடைய பொறுப்பு என்று எழுதி இருந்தார்களாம். இதை எதற்கு சொல்கிறேன் என்றால் இப்பொழுதுதான் தமிழக அரசியலில் திருமாவளவன் என்கிற மனிதன் புகுந்திருக்கிறார். அவர் அரசியல்வாதி யாகாமல் பார்த்துக் கொள்வது நம்முடைய பொறுப்பு.
சமீபத்தில் போன மாதம் நான் லண்டனில் நடைபெற்ற தமிழர் விழாவில் கலந்துக்கொள்ள சென்றிருந்தேன். அங்கே உள்ள தமிழர்கள், எப்படி இருக்கிறது தமிழ்நாட்டு அரசியல்? என்று கேட்டார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை என்று சொன்னேன். தமிழகத்தை பொறுத்தவரையில் தமிழர்களை தமிழர்களுக்கு அடையாளம் காட்டுகிற தலைவர்கள் இரண்டுபேர்தான் இருக்கிறார்கள். யார் என்று நான் கேட்டேன். ஒருவர் திருமாவளவன். மற்றவர் வைகோ என்றார்கள். ஏன் மற்றவர்கள் எல்லாம் சரியாக அடையாளம் காட்டவில்லையா? என்றேன். அவ்வப்போது அடையாளம் காட்டுகிறார்கள். என்று லண்டனில் வசிக்கும் தமிழர்கள் கூறுகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் எக்கு மிகவும் பெருமை.
சில நாட்களுக்கு முன்பு திருமாவளவன் அவர்களை பத்திரிகை ஒன்றுக்காக சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது பேசிக்கொண்டிருந்தோம். இந்திய சுதந்திர போராட்ட காலத்திலேயே வெளிநாட்டிலிருந்து ஆங்கில அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கு தொலைபேசியில் பேசினாராம். யாராவது இந்திய தலைவர்கள் இருந்தால் பேசச் சொல்லுங்கள். உடனே பேச வேண்டும். ஒரு முக்கியமான செய்தியை சொல்ல வேண்டும் என்று. அப்பொழுது இந்தியாவில் நள்ளிரவு நேரம். அங்கே பகல்.
இந்தியத் தலைவர்கள் எல்லோரும் தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னார்களாம். இல்லை இல்லை யாராவது ஒருவராவது விழித்துக் கொண்டிருக்கிறார்களா பாருங்கள். மிக முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் இந்திய தலைவர்களுக்கு என்று சொன்னாராம். அப்பொழுது பார்த்தால் அண்ணல் அம்பேத்கர் மட்டும்தான் விழித்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு நூல் நிலையத்தில் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னார்களாம். அப்படி என்றால் அவரை உடனடியாக பேசச் சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். உடனே அம்பேத்கர் பேசியிருக்கிறார். பேசும்போது அந்த ஆங்கில அதிகாரி எல்லா தலைவர்களும் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் மட்டும் விழித்துக் கொண்டிருக்கிறீர்களே, என்று கேட்டாராம். அதற்கு அம்பேத்கர் மற்ற தலைவர்கள் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால், அவர்களுடைய மக்கள் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். என்னுடைய மக்கள் தூக்கிக்கொண்டிருப்பதால் நான் விழித்துக் கொண்டிருக்கிறேன். அவர்களை எப்படி விழிக்க வைப்பது என்பதுதான் என்னுடைய சிந்தனை என்று சொன்னாராம்.
இப்பொழுது அம்பேத்கர் இருந்திருந்தால் கொஞ்சம் நிம்மதியாக தூங்கியிருப்பார். ஏனென்றால் திருமாவளவன் இருக்கிறார். இன்னொரு கருத்தையும் பேசினோம். சட்டமேதை அம்பேத்கர் சொன்னது என்னவென்றாரர், எவ்வளவு தான் மோசமான ஒரு சட்டம் இருந்தாலும், அதை கையாளுபவர்கள் நல்லவராக இருந்தால், அதன் விளைவு நல்லபடியாக இருக்கும். எவ்வளவு நல்லவிதமான சட்டம் இருந்தாலும் கையாளுபவர்கள் மோசமாக இருந்தால் விளைவு மோசமாகத்தான் இருக்கும் என்ற கருத்தை சொன்னார். இந்த நிமிடத்திற்கு அது எவ்வளவு பொருத்தம் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கலாம். அப்படிப்பட்ட தலைவருடைய விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சி. எங்களுடைய அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் அன்று அவருடைய படத்திற்கு மாலை போடுவது வழக்கம். எல்லா அரசாங்க அலுவலகத்திலும் அந்த பழக்கம் உண்டு. அப்படி போன ஆண்டு போடும்போது பெரிய உயரமான இடத்தில் அவருடைய படம் இருந்தது. அப்பொழுது அங்கே ஏணி வைத்து அதில் ஏறி அதிகாரிகள் மாலைபோட்டு விட்டு வந்தார்கள். அதன்பிறகு என்னை பேச சொன்னார்கள். அதற்கு நான் சொன்னேன், அம்பேத்கர் படத்துக்கு மாலை போடுகிற தகுதி வேண்டுமானால், பல படிகள் கடக்க வேண்டியிருக்கிறது என்றேன். இது ஒரு சம்பவம். இந்த மேடையில் எனக்கு வேடிக்கையாக பேச வேண்டிய நேரம் இல்லை. எல்லோரும் உணர்ச்சிகரமாக பேச வேண்டிய நேரம்.
இரண்டாவது திருமாளவன் அவர்கள் எவ்வளவு அவசரத்தில் இருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். இன்னும் துணிமணி கூட எடுத்து வைக்கவில்லை. விமான நிலையத்திற்கு செல்லவேண்டிய அவசரம். அதனால், 5 நிமிடத்திற்குள் சுருக்கமாக என்னுடைய கருத்துக்களை முடித்துக்கொள்வது தான் நாகரீகம். நான் எப்போதும் எந்தக் கூட்டத்தில் எவ்வளவு பேச வேண்டும் என்பதை முடிவு செய்வேன். இப்படித்தான் ஒரு கூட்டத்தில் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்று கேட்டேன். நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுங்கள். நாங்கள் 5 நிமிடங்களுக்கு மேல் உட்கார மாட்டோம் என்று சொன்னார்கள். அதேபோல திருமாவளவன் அவர்களும் சொல்லாமல் சொல்லிவிட்டார். நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுங்கள். நான் 7 மணிக்கெல்லாம் சென்று விடுவேன் என்று. நம்முடைய இளைஞர்களை வழிநடத்துவதற்கு தகுதியான தலைவர் மிகவும் அவசியம்.
ஏனென்றால், தமிழகத்தில் தான் தற்கொலை விகிதம் அதிகம். உலகத்திலே தமிழகத்தில் தான் இளைஞர்கள் அதிகமாக தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். ஏனென்றால், ஜெயலலிதா பதவியேற்றது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொன்னபோது, 13 இளைஞர்களும், கலைஞரை நள்ளிரவு கைது செய்த போது 43 இளைஞர்களும் தற்கொலை செய்ய முயற்சித்தார்கள். இந்திரா காந்தி சுட்டுக் கொன்றபோது 17 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்கள். தமிழ் நாட்டிலே 15 பேர் தற்கொலை. ஒருத்தர் ஒரிசாலிவிலே, ஒருத்தல் மலேசியாவிலே.
முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன், ஒரிசாவில் மலேசியாவில் யார் தற்கொலை செய்தார்கள் என்று விசாரித்தாராம். அவர்கள் இங்கிருந்து பிழைக்கச் சென்றவர்களாம். அப்படி இருக்கிறது தமிழக இளைஞர்களின் இன்றைய நிலை? ஏனென்றால் நல்ல வழி காட்டுதல் இல்லை. எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றவுடன் 17 பேர் இறந்து விட்டனர். 19 பேர் தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றினார்கள். உண்மையிலேயே எம்.ஜி.ஆர். இறந்த போது 30 இளைஞர்கள் இறந்து விட்டார்கள். இதுவெல்லாம் தமிழகத்தினுடைய வரலாறு. அப்படி இருக்கிறது தமிழக இளைஞர்களின் நிலைமை.
ஆந்திராவில் என்.டி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்டபோது அந்த ஊரில் யாரும் சாகவில்லை. தமிழ்நாட்டில் ஒருவன் இறந்துபோனான். இப்படி இருக்கும்போது முன்னாள் துணை வேந்தர் அவர்கள் விளக்கம் சொல்கிறார். இதற்கு பலகீனம் ஒரு காரணம். பிரச்சார மயக்கம் ஒரு காரணம். தலைமை வழிபாடு ஒரு காரணம் என்று அவர் பல காரணங்களை சொல்கிறார். இது எதற்கு என்றால், தமிழ் நாட்டில் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தமிழக இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு தகுதியான தலைவர் வேண்டும் என்பது நல்லவர்களின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பினை நிறைவேற்றக் கூடிய அளவில் உருவாகியிருப்பவர் திருமாவளவன் அவர்கள் என்பதில் எங்களுக்கெல்லாம் மிகவும் மகிழ்ச்சி. அது மட்டுமல்ல தலித் மக்களுக்கு வாழ்ந்துகாட்டுகிறவர். வழிகாட்டுவதற்கு நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள். வாழ்ந்து காட்டுகிறவர்கள் ஒருத்தர் அல்லது இரண்டு பேர்தான். அவர் தலித் மக்களுக்கு மட்டும் வழிகாட்டுகிற தலைவராக இருக்கிறார். கூடிய விரைவில் தமிழக மக்களுக்கே வழிகாட்டுகிற தலைவராக மாற வேண்டும்.
ஏனென்றால் நல்லவர்களுடைய வகையிலே தலைமை வரவேண்டும் என்பது நல்லவர்களின் எதிர்பார்ப்பு. இவையெல்லாம் லண்டனில் உள்ள தமிழர்களோடு பகிர்ந்துக் கொண்ட கருத்துக்கள். இது இலண்டன் வாழ் தமிழர்களின் எதிர்பார்ப்பு. அதைத்தான் நான் சொல்ல வந்தேன். அப்படி இருக்கும் போது மதம், சாதி என்று சொல்கிறார்களே, சாதி, மதம் ஒன்றும் பெரிதல்ல என்று பேசிக்கொண்டிருந்தோம். சாதியெல்லாம் உள்ளுக்குள் லேசாக எடுத்து விடலாம். மத உணர்வு என்பது? அதற்கு ஒரு கதை சொன்னேன்.
மந்திரி ஒருவர் ஒரு கிராமத்திற்கு வந்தார். மூன்று மதத் தலைவர்களும் வந்தார்களாம். ஒருவர் பெருமாள் கோவில் பூசாரி, ஒரு ஃபாதர், பள்ளி வாசலிலிருந்து ஒரு இமாம். முன்று பேரும் எங்க கோயிலுக்கு வாங்க, எங்க கோயிலுக்கு வாங்க என்று மந்திரியை பிடித்து இழுக்கிறார்கள். அதற்கு அவருடைய பி.ஏ. சொன்னாராம் இதோபார் மூன்று பேரில் யாருடன் சென்றாலும், மற்ற இரண்டு பேரின் ஓட்டு உனக்கு கிடைக்காது. ஆகவே, மயக்கம் வந்ததுபோல் கீழே விழுந்து விடு. நான் மந்திரிக்கு மயக்கம் வந்துவிட்டது என்று சொல்லி வீட்டிற்கு தூக்கிச் செல்கிறேன். இதுதான் தப்பிப்பதற்கு வழி என்றாராம். அப்படி சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ஒரு புலி வந்துவிட்டது. புலி வந்ததும் கூப்பிட வந்தவர்கள் ஓடி விட்டார்கள். கூட்டம் கலைந்துவிட்டது. மந்திரியும், பி.ஏ.வும் உள்ளே நுழைந்து பார்த்தால் ஸ்டேரிங்கில் கைப்பட்டு சத்தம் கேட்டதும் புலி ஓடிவிட்டது. இவர்கள் இரண்டுபேரும் இறங்கிவந்து பார்க்கும்போது கூப்பிட வந்தவர்கள் யாரும் இல்லை. புலி போய்விட்டது எல்லோரும் வாருங்கள் என்று கூப்பிட்டால் யாரும் வரவில்லை. எல்லோரும் ஓடி ஒளிந்து விட்டார்கள். சரி நாமாவது போவோம் என்று மந்திரியும், பி.ஏ.வும் சென்று ர்ச் கதவை திறந்து பார்த்தார்களாம். மெதுவாக பெருமாள் கோவில் பூசாரி அங்கிருந்து வெளியில் வருகிறாராம். பெருமாள் கோவிலை திறந்தால் இமாம் வருகிறாராம். பயந்துக் கொண்டே எங்கே போய்விட்டது அந்த மத உணர்வெல்லாம்?
அது அப்படிதான் மதம் என்பது ஒரு பாதுகாப்பாக உபயோகப்படுத்தக்கூடிய ஒரு விஷயம். ஒரு சிறுவனை, அதோ போகிறாரே அவர் யார் என்று கேட்டால் எங்க அப்பாதான் என்று சொல்கிறான். இதோ போகிறாரே அவர் யார் என்றால், இவரும் எங்க அப்பா என்றா சொல்லுவான்? அப்படித்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் கடவுள் விசயத்தில்.
ஒரு தெருவில் இரண்டு பேர் ஒருவர் முகத்தில் ஒருவர் குத்திக் கொண்டு சண்டை போட்டுக்கொண்டு இருந்தார்களாம். எல்லோரும் கூடி வேடிக்கை பார்க்கிறார்கள். ஒரு சின்ன பையன் ஒதுங்கி நின்றுக்கொண்டிருக்கிறான். அவனிடம் அவங்க இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்களே என்ன சண்டை? என்று கேட்டார்களாம். அதற்கு அவன், எங்க அப்பாவுக்கும் இன்னொருத்தருக்கும் சண்டை நடக்கிறது. அதை எல்லோரும் வேடிக்கை பார்க்கிறார்கள். நானும் வேடிக்கை பார்க்கிறேன் என்று சொன்னான். சரிப்பா அந்த இரண்டு பேரில் யார் உன்னுடைய அப்பா? என்று கேட்டுள்ளனர். சண்டையே அதற்காகத்தான் நடக்கிறது என்றானாம். நம் மதவாதிகள் போட்டுக் கொள்கிற சண்டைக்கும், அதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? இதே சண்டைதான். அப்படித்தான் நடந்துக் கொண்டிருக்கிறது உலகம். ஒரு நம்பிக்கைக்குரிய தலைவர் தமிழ் நாட்டில் உருவாகி வருகிறார். நாமெல்லாம் மகிழ்ச்சியடையக்கூடிய ஒரு விஷயம். கூடியசீக்கிரம் அவர் எல்லோருக்கும் வழிகாட்டக்கூடிய ஒரு தமிழக தலைவராக உருவாவார் என்று சொல்லி என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.